Hemoglobin: ஹீமோகுளோபினை அதிகரிப்பது அசைவ உணவுகளா இல்லை சைவமா? ஆச்சரியம் தரும் முடிவுகள்
எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது. இரும்புச்சத்து குறைபாடு உடலில் பல நோய்களை உண்டாக்கும். பெண்கள் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இரும்புச் சத்து குறைபாட்டால், உடலில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டு, ரத்த சோகை போன்ற ஆபத்தான நோயை சந்திக்க வேண்டியுள்ளது.
இரும்புச்சத்து குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள் என்னவென்று தெரிந்துக் கொள்வோம்.
இரும்புச்சத்துத் தேவை அதிகரிப்பு: குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கர்ப்பம், பாலூட்டுதல் என பெண்களுக்கு வளர்ச்சி மற்றும் குழந்தைப் பேறு, மாதவிடாய் என பல காரணங்களால் இரும்புச்சத்து ஆண்களைவிட அதிகம் தேவைப்படுகிறது.
உணவு உட்கொள்ளல்: உலகம் முழுவதும் மிகவும் காணப்படும் இரும்புச் சத்துப் பற்றாக்குறைக்கான காரணம் என்னவென்றால் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உண்ணாதது தான். பொதுவாக வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள், தானியங்கள் மற்றும் பால் அதிகமாகவும், இரும்புச்சத்து குறைவாகவும் இருக்கும். மக்கள், குறிப்பாக பதின்ம வயதினர், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளும் நபர்களும் இரும்புச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
இரத்த இழப்பு: அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப் புண்கள், மூல நோய் என நோய்கள் காரணமாகவும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.
இவற்றைத் தவிர, உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் குறைவது, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பு இல்லாமை உட்பட பல்வேறு காரணங்களும் உடலில் இரும்புச்சத்து குறைவாவதற்கு காரணமாகிறது. குறைந்த வருமானம் கொண்ட மக்களின் உணவில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.