குளிர்காலத்தில் உண்டாகும் நுரையீரல் பிரச்னையில் இருந்து பாதுகாக்க டிப்ஸ் இதோ

நாம் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நுரையீரல் நன்றாக செயல்பட வேண்டியது அவசியம். ரத்தத்தில் ஆக்சிஜனை செலுத்தி கார்பன் டை ஆக்ஸைடை சுவாசம் மூலம் வெளியேற்றுவதுதான் நுரையீரலின் முக்கிய செயல்பாடாகும்.

இப்படி வாயுக்களை மாற்றும் போதுதான் நம் உடலுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதோடு மெடபாலிக் செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கிறது. சுவாசம் மட்டுமின்றி தீங்கிழைக்கும் பொருட்களை உடலின் உள்ளே வராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியிலும் முக்கிய பங்காற்றுகிறது நுரையீரல்.

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான முதல் அடிப்படை நுரையீரல் முறையாக செயல்பட வேண்டும். இதில் ஏதாவது பாதிப்பு இருந்தால் சுவாசப் பிரச்னைகளும் பல சிக்கல்களும் ஏற்படும். இதுமட்டுமின்றி காலநிலை மாற்றமும் உலக வெப்பமயமாதலும் ஆரோக்கியமான நபர்களுக்கு கூட உடல்நலப் பிரச்னைகளை கொண்டு வருகின்றன.

கோடை காலம், மழைக்காலம் முடிவடைந்து குளிர்காலம் வந்துவிட்டது. இனிதான் பல சுவாசப் பிரச்னைகள் ஏற்பட தொடங்கும். மழைக்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதிகமான ஈரப்பதம் மற்றும் அதனோடு சேர்த்து அதிகமான மாசுபாடு காரணமாக துகள்கள் காற்றில் அதிக நேரம் இருக்கின்றன. அதேப்போல் எங்கு பார்த்தாலும் ஈரமாக இருப்பதால் இந்த சமயத்தில் பூஞ்சைகளும் அதிகரிக்கின்றன. குளிர்காலத்தில் வீசும் குளிர்ச்சியான காற்று சளித் தொல்லையையும், மூச்சுக்குழாய் அழற்சியையும் கொண்டு வரும்.

மேலும் குளிர்காலத்தில் நிறைய நபர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதாலும் வைரல் மற்றும் பாக்டீரியா தொற்று எளிதாக பரவுகின்றன. குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை குறைத்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும்.

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்:

– புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிடுங்கள்.

– சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். யோகா, தியானம் போன்ற சுவாசப் பயிற்சியில் ஈடுபடுங்கள். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள்.

– சரிவிகித உணவை பின்பற்றுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். உடலின் வெப்பநிலை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

– வருடத்திற்கொறுமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

– மாசுபாடு நிறைந்த இடங்களுக்குச் செல்லாதீர்கள்.

– வீட்டிற்குள் காற்றின் தரம் நன்றாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளிர்காற்று அறையினுள் வராமல் இருக்க ஜன்னலை மூடி வையுங்கள். தேவைப்பட்டால் ஏர் புயூரிஃபையர் பயன்படுத்துங்கள்.

– மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட நபர்களோடு நெருக்கமாக இருக்காதீர்கள்.

– எளிதில் நோய் தாக்கும் பகுதியில் வசித்து வந்தால் குளிர் காய்ச்சல், நிமோனியாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

– மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள், இன்ஹேலர்களை பயன்படுத்துங்கள்.

– ஆரம்பத்திலேயே நோய்களுக்கான அறிகுறிகளை கண்டறிந்து உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *