வருகிறது கலகலப்பு 3 – கதாநாயகன் வேட்டையில் சுந்தர் சி!
இயக்குநரான சுந்தர் சி. தலைநகரம் படத்தில் நாயகனாகி, தொடர்ச்சியாக படங்களில் நடித்து, ஒருகட்டத்தில் நடிக்கிற படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவ, மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பினார். அப்படி இயக்குநராக அவர் ரீஎன்ட்ரி கொடுத்தப் படம், கலகலப்பு. 2012 மே 11 ம் தேதி வெளியான கலகலப்பு படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்திருந்தனர்.
அஞ்சலியின் முறைமாமனாக நடித்த சந்தானம், அவரது எதிரி மனோபாலா ஆகிய கதாபாத்திரங்கள் ;சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கலகலப்பு மாபெரும் வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கலகலப்பு 2 படத்தை ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா நடிப்பில் 2018 ல் இயக்கினார். நிக்கி கல்ராணி, கேதரின் தெரேசா ஆகியோர் இதில் நாயகிகளாக நடித்தனர். யோகி பாபுவின் சாமியார் காமெடி வொர்க் அவுட்டானது. இந்தப் படமும் வசூலைப் பெற்றது.
இந்நிலையில், கலகலப்பு 3 படத்துக்கான ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார் சுந்தர் சி. இதில் நாயகனாக நடிக்க அவர் கவினை தேர்வு செய்துள்ளார். ஸ்டார், கிஸ், நெல்சன், வெற்றிமாறன் தயாரிப்பில் தலா ஒரு படம் என கவின் கைவசம் நான்குப் படங்கள் உள்ளன. இதனால், கலகலப்பு 3 படத்துக்கு உடனடியாக கால்ஷீட் தர முடியாத நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், கிஸ் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சுந்தர் சி. கவினின் கால்ஷீட்டுக்காக சில மாதங்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளார்.
சுந்தர் சி.யின் இன்னொரு வெற்றிகரமான சீரிஸ், அரண்மனை. இதன் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. 4 வது பாகமும் தயாராகி, இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர். பிறகு மறுதேதி குறிப்பிடாமல் அப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. கலகலப்பு 3 தொடங்கும் முன் அரண்மனை 4 படத்தை வெளியிடும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.