புதிய CE001 பைக்கை அறிமுகம் செய்த ஹீரோ… 100 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் – ஏன் தெரியுமா?
Hero World 2024 நிகழ்ச்சியில் அனைவரின் கவனமும் மேவரிக் (Mavrick) மற்றும் Xtreme 125R பைக் மீது இருக்க, எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் புதிய CE001 பைக்கின் லிமிடெட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்.
வெறும் 100 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய ஹீரோ CE001 பைக் பார்ப்பதற்கு கரிஷ்மா XMR 210 போலவே உள்ளது. ஹீரோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர். ப்ரிஜிமோகன் லால் முஞ்சால் அவர்களின் நூறாவது பிறந்தநாளை நினைவுப்படுத்தும் விதமாக இந்த புதிய ஹீரோ CE001 பைக் அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதல் முறையாக இப்போதுதான் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ நிறுவனம். இந்தியாவிலேயே மிகவும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட பைக் என CE001 பைக்கை ஹீரோ நிறுவனம் கூறுகிறது. இந்த பைக் ஏன் கரிஷ்மா XMR 210 பைக்கை அடிப்படை மாடலாக கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதற்கும் சுவாரஸ்யமான காரணம் உள்ளது. ஹீரோ குழுமத்தின் தலைவராக ப்ரிஜிமோகன் லால் முஞ்சால் இருந்தபோதுதான் கரிஷ்மா (Karizma) பைக்கின் திட்டப் பணிகள் தொடங்கின.
கரிஷ்மா XMR பைக் முழுமையான fairing-யோடு வந்தாலும், புதிய CE001 பைக் பாதியளவு fairing வடிவமைப்பில் தான் இருக்கிறது. இந்த பைக்கின் படி வொர்க் அனைத்திற்கும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாக் மாடலை விட எடை குறைவாகவே இருக்கும். மேலும் இந்த பைக்கை நேராக அமர்ந்து ஓட்டுவது போல்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஞ்சினில் என்ன மாதிரியான மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் ஹீரோ நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும் ஸ்டாண்டர்டு மாடலை விட புதிய CE001 பைக்கிற்கு பவர் பூஸ்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதோடு ஒப்பிடும் போது, ஹீரோ கரிஷ்மா XMR பைக், ட்ரெல்லிஸ் ஃப்ரேமுடன் 210சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்கியூட் கூல்ட் இஞ்சின் பெற்றிருந்தது. மேலும் இது அதிகபட்சமாக 25bhp பவரையும் 20Nm இழுவிசையும் கொண்டுள்ளது.
அக்ராபோவிக் எஸ்காஸ்ட் உள்ளிட்ட பல சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் பாகங்களோடு சிறந்த பவர் மற்றும் எடை ரேஷியோவுடன் ஹீரோ CE001 பைக் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹீரோ CE001 பைக்கின் விலை பற்றிய எந்த விவரங்களையும் இதுவரை ஹீரோ நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த வருட ஜூலை மாதத்திற்குள் 100 பைக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது ஹீரோ.
இந்த பைக்குகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ள முடியும். வரும் வாரங்களில் இதற்கான முன்பதிவை ஹீரோ நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.