ஒரே மாதத்தில் 4.68 லட்சம் யூனிட்ஸ்.. டூ வீலர் விற்பனையில் சாதித்த ஹீரோ மோட்டோகார்ப்!
உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Hero MotoCorp சமீபத்தில் முடிந்த பிப்ரவரி 2024 மாதத்தில் YOY-ல் 19% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது 2024 பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செய்த வாகனங்கள் உட்பட சுமார் 4,68,410 யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அதாவது 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த நிறுவனம் மொத்தம் 3,94,460 யூனிட்ஸ்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. பிப்ரவரி 2024 -ன் மொத்த விற்பனை எண்ணிக்கையான 4,68,410 யூனிட்ஸ்களில் இந்தியாவில் மட்டுமே 4,45,257 யூனிட்ஸ்களை விற்பனை செய்திருப்பதாகவும், மீதமுள்ள 23,153 யூனிட்ஸ்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் கூறி உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அதாவது 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நிறுவனம் அப்போது உள்நாட்டு சந்தையில் அதாவது இந்தியாவில் 3,82,317 யூனிட்ஸ்களை விற்றிருந்த அதே நேரம் 12,143 யூனிட்ஸ்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் செக்மென்ட் ம்ற்றும் மோட்டார் சைக்கிள்ஸ் செக்மென்ட் என இரண்டின் விற்பனையும் பிப்ரவரி 2024-ல் கணிசமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (பிப்ரவரி 2023-ல்) நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை 22,606 யூனிட்ஸ்களாகவும், மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 3,71,854 யூனிட்ஸ்களாகவும் இருந்தது. இந்த நிலையில் 2024 பிப்ரவரியில் இந்த விற்பனை எண்ணிக்கை அதிகரித்து ஸ்கூட்டர் விற்பனை 31,481 யூனிட்ஸ்களாகவும், மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 4,36,929 யூனிட்ஸ்களாகவும் இருக்கிறது. இது முறையே 17.5% மற்றும் 39.26% ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியைக் குறிக்கிறது.
அதே போல் FY24-க்கான ஒட்டுமொத்த YTD விற்பனை மொத்தம் 51,31,040 யூனிட்ஸ்கள் விற்பனையாகி உள்ளன. இதில் 49,61,275 யூனிட்ஸ்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 1,69,765 யூனிட்ஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 4,733,948 யூனிட்ஸ் மோட்டார் சைக்கிள்களும், 3,97,092 ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை எடுத்துரைப்பதாகவும், அடுத்து வரும் மாதங்களில் இந்த வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்ப்பதாகவும் Hero MotoCorp நிறுவனம் கூறுகிறது.
இதனிடையே பிரீமியம் மோட்டார் சைக்கிள்களில் நிறுவனம் அதன் பங்கை வளர்ப்பதற்காக கடந்த மாதம் அதாவது 2024 பிப்ரவரியில் புதிதாக Mavrick 440 என்ற மிடில்வெயிட் பைக்கை அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.19 லட்சத்தில் இருந்து ரூ.2.24 லட்சம் வரை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கின் டெலிவரி அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 2024-ல் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.