கழுதைப்புலியை கொன்று கணவர் உயிரை காப்பாற்றிய வீரப்பெண்! குவியும் பாராட்டு
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் கழுதைப்புலியிடம் சிக்கிய கணவரை பெண்ணொருவர் போராடி மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
தாக்கிய கழுதைப்புலி
சத்தீஸ்கர் மாநிலம் கன்கேர் மாவட்டத்தில் உள்ள இங்க்ரா எனும் கிராமத்தில் வசித்து வருபவர் நந்து ராம் யாதவ் (32).
இவர் தனது மனைவி சுக்னி (28) மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். தனது வயலில் நந்து சோளப்பயிர் செய்துள்ளார்.
இந்த நிலையில் நந்து தனது வயலுக்கு சென்று செடிகளுக்கு உரம் சேர்த்துள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் இருந்து வந்த கழுதைப்புலி அவரைத் தாக்கியுள்ளது.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நந்து அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சுக்னி, தன் கணவரை கழுதைப்புலி தாக்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனினும் அவர் துணிச்சலாக மூங்கில் தடி ஒன்றை எடுத்து கழுதைப்புலியை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் நந்து அதன் பிடியில் இருந்து தப்பினார்.
குவியும் பாராட்டு
மேலும் கழுதைப்புலி கடுமையான தாக்குதலால் அங்கேயே இறந்தது. இதனைத் தொடர்ந்து கைகள், முதுகு மற்றும் கால்களில் காயம் பட்ட நந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் வனத்துறை மூலம் சுக்னி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. அத்துடன் அவரது வீரதீர செயலை ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.