‘அழகான முகத்தை மறைக்குதே…’ பர்தா அணிந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த சென்னை போலீஸ்!
சென்னையில் காவல் நிலையத்திற்குச் சென்ற பெண்ணிடம் தலைமை காவலர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை அவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பர்தா அணிந்திருந்த அந்தப் பெண்ணிடம் “அவரது அழகான முகத்தை” புர்கா மறைத்துக்கொண்டிருப்பதால், பர்தாவைக் கழற்றுமாறு கூறியுள்ளார். வாகனத் திருட்டு தொடர்பாக அளித்திருந்த புகாரின் நிலையை அறிந்துகொள்வதற்காக அந்தப் பெண் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதையடுத்து, அந்த பெண் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். புகார் பதிவு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது இருசக்கர வாகனத்தை புதுப்பேட்டையில் கண்டுபிடித்து மீட்டிருக்கிறது.
காணாமல் போன வாகனம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், ஸ்கூட்டரை நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு தலைமைக் காவலர் வேல்முருகன் கூறியுள்ளர். நீதிமன்றத்துக்குச் செல்வதற்குத் தயங்கிய அந்தப் பெண், போலீசார் முன் அழுத் தொடங்கியுள்ளார்.
அப்போது வேல்முருகன் அழும்போதும் அழகாக இருப்பதாகக் கூறி, பர்தாவை கழற்றச் சொல்லி அதட்டியிருக்கிறார். அழகான முகத்தை பர்தா மறைக்கிறது என்பதால் அதனைக் கழற்றிவிடுமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதனையடுத்து, அந்தப் பெண் திருடுபோன வாகனத்தை மீட்கச் சென்றபோது தலைமைக் காவலர் வேல்முருகன் தன்னிடம் வரம்பு மீறி நடந்துக்கொண்டார் என புகார் அளித்தார்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த காவல்துறை வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.