15 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல். விரைந்தது INS போர்க்கப்பல்!
சோமாலியா அருகே இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் 15 பேர் உள்ளனர். லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்திய நிலையில், இந்தியர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் கூறப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கடத்தப்பட்ட லைலா நார்போல்க் என்ற கப்பலை மீட்க ஐஎன்எஸ் சென்னை கப்பலை, இந்திய கடற்படை அனுப்பியுள்ளது.
அதன்படி, கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மற்றும் இந்திய மாலுமிகளை மீட்க சோமாலியா விரைந்தது கடற்படை கப்பலான INS சென்னை. இதுதொடர்பாக இந்திய கடற்படை கூறியதாவது, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் சோமாலியா வழியாக சென்றபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடத்தப்பட்ட இந்திய மாலுமிகளுடன் பேசி வருகிறோம்.
நேற்று மாலை சுமார் அடையாளம் தெரியாத 5 முதல் 6 பேர் வரையுள்ள நபர்கள், ஆயுதங்களுடன் வந்து கப்பலை கடத்தியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடற்படை உடனடியாக கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. மேலும், இந்திய கடற்பாதுகாப்புக்கு உதவும் ஐஎன்எஸ் சென்னை என்ற போர்க் கப்பலும் திருப்பிவிடப்பட்டது.
இன்று காலை இந்திய கடற்படை விமானம் கப்பலின் மேல் பறந்து, கடத்தப்பட்ட கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. கடற்படை விமானம் தொடர்ந்து கடத்தப்பட்ட கப்பலை கண்காணித்து வரும் நிலையில், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலும் நெருங்கிவிட்டது.
மேலும், மற்ற ஏஜென்சிகள் உடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது என்றும் சர்வதேச மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.