ராமஜென்ம பூமிக்கு செல்லாத கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டோம் என இந்துக்கள் சொல்லனும்..எச்.ராஜா கொதிப்பு
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ராமஜென்ம பூமிக்கு செல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என இந்துக்கள் அறிவித்தால்தான் இவர்கள் திருந்துவார்கள் என்று எச் ராஜா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்ட நாட்கள் சட்ட போராட்டம் நடந்தது. இதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
மேலும் பிரதமர் மோடி, கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் இந்த ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து கோவில் கட்டும் பணிகள் விரைவாக தொடங்கி நடந்து வந்தது. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டிடக்கலை நுட்பத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. . மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் பிரமாண்டமாக அமைய உள்ளது.
ஜனவரி 22-ல் திறப்பு: இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர 3 ஆயிரம் விவிஐபிக்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக குடமுழுக்கு விழாவுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஓட்டு போடாதீங்க: அதன்படி, காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்பட பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. எனினும் ராமர் கோவில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியது. இதனால் தற்போது பாஜகவினர் காங்கிரசை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் எச் ராஜாவும் இந்து மதம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எச் ராஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்து மதம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சிறுபான்மை ஓட்டுக்கள் பற்றி மட்டுமே கவலை. ராமஜென்மபூமிக்கு செல்லாத கட்சிகளுக்கு இந்துக்கள் வாக்களிக்க மாட்டோம் என இந்துக்கள் அறிவித்தால் தான் இவர்கள் திருந்துவார்கள். இவ்வாறு எச் ராஜா பதிவிட்டுள்ளார். தற்போது இவரது கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.