ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை: தீர்ப்பு தள்ளி வைப்பு!
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி, ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின் முடிவுகள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி, ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக தென்பட்ட ஆதரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த வாரணாசி நீதிமன்றம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை காசி விசுவநாதர் கோயில் அறக்கட்டளை நியமிக்க வேண்டும் என்றும், பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும், 7 நாட்களுக்குப் பின் பூஜைகள் நடத்திக் கொள்ளவும் இந்துக்களுக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி அளித்த இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.
அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.