ஸ்ரீராமரை விட அவரது நாமத்துக்கு வலிமை அதிகம்!
போர் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர், அசுவமேத யாகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்!
இராமனின் அரசவையை வசிட்டர், விசுவாமித்திரர் போன்றோர் அலங்கரித்திருந்தனர். அந்த சமயத்தில் அரசன் ஒருவன் ஸ்ரீராமரின் அரசவைக்கு வந்து ஸ்ரீராமரை வணங்கிச் சென்றான். அங்கிருந்த நாரதர் கலகமூட்டும் நோக்கத்துடன் விசுவாமித்திரரிடம், ‘அந்த அரசன் உங்களை வணங்காமல் அவமதித்து விட்டான்’ என விசுவாமித்திரரை கோபம் கொள்ள செய்தார்.
வெகுண்டெழுந்த விசுவாமித்திரர், ‘இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அந்த அரசனின் தலையை என் காலில் கொண்டு வந்து போடவேண்டும்’ என ஸ்ரீராமனிடம் ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற்கொண்ட ஸ்ரீராமனும் போருக்குக் கிளம்பி விட்டான். இதற்கிடையில் நாரதர் அந்த அரசனையும் சந்தித்து விசுவாமித்திரரின் கோபத்தையும் அதன் விளைவையும் கூறிவிட, அந்த அரசன் பயந்து நாரதரின் காலில் விழுந்து காப்பாற்ற வேண்டினான்.
‘இராம பாணத்திற்கு முன்னால் தன்னால் ஏதும் செய்ய இயலாது’ எனக் கூறிய நாரதர், ‘இந்த உலகில் உன்னைக் காப்பாற்றும் வல்லமை ஒரே பெண்ணுக்குத்தான் இருக்கிறது. அவள் பாதங்களை சரணடைந்து விடு. அவள் உனக்கு அபயமளித்தேன் எனச் சொல்லும் வரை அவள் பாதத்தில் வீழ்ந்து கிட’ என்று கூறினார். அவள்தான் அனுமனின் தாய் அஞ்சனா தேவி.
அஞ்சனா தேவியில் காலில் வீழ்ந்து கதறியழுத மன்னனை காப்பாற்றுவதாக கூறிய அஞ்சனா தேவி, தனது மகன் அனுமனை அழைத்து, ‘இவனைக் காப்பாற்று’ எனக் கூறினாள். தாயின் கட்டளையை மீற இயலாத அனுமன், தனது வாலை சுருட்டி மலை போல அமைத்து அதன் நடுவில் அந்த அரசனை உட்கார வைத்து விட்டு, மேலே அமர்ந்து ராம நாமம் ஜபிக்க ஆரம்பித்தார்.
போருக்கு வந்த ஸ்ரீராமன், அனுமனிடம் அரசனை வெளியே அனுப்புமாறு கூற, அனுமன் தனது தாயின் கட்டளையைக் கூறி தனது இயலாமையை கூறினார். கோபமுற்ற ஸ்ரீராமன், ‘உன் மீது பாணம் தொடுக்க வேண்டி இருக்கும்’ என எச்சரித்ததையும் அனுமன் ஏற்காமல் ராம நாம ஜபத்தில் ஈடுபட்டார்.