ஆட்டோ டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! கம்மி பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தும் ஓலா!

ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களை தயாரித்து வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் கமர்ஷியல் வாகனமாக எலெக்ட்ரிக் ஆட்டோவையும் அறிமுகப்படுத்தும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் பங்குச்சந்தையில் தனது காலடித்தடத்தை எடுத்து வைக்கும் முன்பு இந்த அறிமுகத்தை செய்ய தயாராகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா நிறுவனம் முதன்முதலாக கேப் சேவையில் இந்தியா முழுவதும் பிரபலமாக நிறுவனமாக மாறியது. பின்னர் இந்நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் என்ற நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனம் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையை அமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது.
தற்போது வரை ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர்களை மட்டுமே தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் தனது வாகனத்தை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டீசர்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகின.
இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது புதிதாக எலெக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தி முதல் முறையாக கமர்ஷியல் வாகன பிசினஸில் தன்னை நுழைத்துக் கொள்ள தயாராகி வருகிறது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு ராஹி என பெயர் வைத்துள்ளது.
ராஹி என்றால் ஹிந்தி வார்த்தையாகும். இந்த வார்த்தைக்கு பயணி என்ற அர்த்தம் இருக்கிறது. இந்த பெயரில் தான் தனது எலெக்ட்ரிக் ஆட்டோவை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்டோ நேரடியாக மார்க்கெட்டில் உள்ள மகேந்திரா டிரியோ, பியாஜியோ ஆபே இசிட்டி, பஜாஜ் ஆர்இ ஆகிய எலெக்ட்ரிக் ஆட்டோ உங்களுக்கு போட்டியாக இந்த ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோவும் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது.
ஓலா நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக கமர்ஷியல் வாகன பிசினஸில் இறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தனது முதல் படியை எடுத்து வைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஓலா நிறுவனம் அடுத்தடுத்த மாதங்களில் தனது ஜிகா ஃபேக்டரியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை திட்டமிட்டுள்ளது.
மூன்று சக்கர வாகனத்தை பொருத்தவரை மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 5.8 லட்சம் எலெக்ட்ரிக் 3 சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு நடந்த விற்பனையை விட 66% அதிகமாகும். இதனால் ஓலா நிறுவனம் இந்த செக்மெண்டில் வருவதால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு வாய்ப்பு உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தயாரிக்க போகும் இந்த ராஹி எலெக்ட்ரிக் ஆட்டோவின் விலையைப் பொறுத்தவரை மார்க்கெட்டில் உள்ள போட்டி நிறுவனங்களின் ஆட்டோ விலையை போலவே, இந்த வாகனத்தின் விலையும் ரூபாய் 2-3.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் அறிமுகமானால் நிச்சயம் சிறப்பான விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் பெட்ரோல் செலவிற்கு அவர்கள் வருமானத்தில் ஏராளமான பணத்தை செலவு செய்து வருகின்றனர். எலெக்ட்ரிக் ஆட்டோ வரும் பட்சத்தில் அவர்களது பெட்ரோல் செலவு பெரும் அளவிற்கு மிச்சப்படும். இதனால் ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு வரும்போது ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.