இன்று நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
நாகை மாவட்டம் வேதாரண்யம் கோவிலில் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.ஸ்ரீநடராஜ பெருமானின் 16 சபைகளில் இந்தத் தலமும் ஒன்று. சப்தவிடங்கத் தலங்களில், இந்த ஆலயத்தை புவனவிடங்கத் தலம் என்று போற்றுவார்கள்.சேர, சோழ, பாண்டியர்களும் வழிபட்ட பூமி. தேவார மூவரும் பாடிய ஆலயம் எனப் பல பெருமைகள் கொண்டது வேதாரண்யம்.
வேதங்கள் நான்கும் ஆரண்யங்களாக, அதாவது வனங்களாக, காடுகளாக இருந்து சிவ வழிபாடு செய்த ஒப்பற்ற தலம் என்பதால், வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் இந்தத் தலத்துக்குப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் முன்னிட்டு வேதாரண்யம் தாலுகாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என திருக்கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.