வரும் 21-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!

திருவாரூர் தியாகராஜர் கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், சைவ சமய பீடத்தின் மிகப் பெரிய தலமாகவும், சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இங்கு பிறந்தாலே முக்தி என்ற சிறப்புப் பெற்ற தலம். இங்கு இருக்கும் ஆழித்தேர் உலகிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது.

இந்த ஆழித்தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த 96 அடியில் 36 அடியானது மரத்தினால் ஆன தேர்ப் பீடமாகும். மற்ற 60 அடி மூங்கில் போன்றவற்றால் இத்தேர்பீடத்தின் மீது எழுப்பப்படும் கோபுரமாகும். இந்த கோபுரத்தின் மீது சுமார் ஐந்து டன் எடையுள்ள வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்படும். பிரமிக்க வைக்கும் பிரமாண்டத் தேரினை வடம் பிடித்து இழுக்க சுமார் ஒரு கி.மீ நீளம் தூரம் கொண்ட 15 டன் எடையிலான வடக்கயிறு பயன்படுத்தப்படும்.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் புகழ்பெற்றது திருவாரூர் தேர் அழகு என சிறப்பிட்டு குறிப்பிடும் அளவிற்கு இந்த தேர்த்திருவிழா புகழ்பெற்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் வருகின்ற வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் நடந்தது. இந்த நிலையில் ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, “திருவாரூர் மாவட்டத்திற்கு ஆழித்தேரோட்டத் திருவிழாவையொட்டி மார்ச் 21-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

ஆனால் அன்றைய தினம் நடைபெற உள்ள ப்ளஸ் 1 பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 2024 மார்ச் ஐந்தாவது சனிக்கிழமை அதாவது 30.3.2024 அன்று திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

திருவாரூர் மாவட்டத்திற்கு ஆள் தேரோட்டம் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *