கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த வீட்டிலேயே இருக்கு மருத்துவம்.. இதை ஃபாலோ பண்ணுங்க!

உடல் ஆரோக்கியத்தில் முக்கியமாக இருப்பது காலை நடைபயிற்சி. தினமும் நடைபயிற்சி செய்வது நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இந்நிலையில், பனிக்காலத்தில் காலை நடைபயிற்சி என்பது கடினமாக இருக்கிறது. காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தால் பொழுதே விடிந்திருக்காது. அதையும் மீறி வெளியே சென்றால் எதிரே இருப்பவர் கூட தெரியாத அளவுக்கு பனி கண்ணை மறைக்கும். எல்லாவற்றையும் தாண்டி உடற்பயிற்சி செய்தாலும் கூட, வழக்கமான அளவுக்கு நாம் செய்ய வாய்ப்பில்லை.
இதனால் நம் உடல் ஆரோக்கியம் எப்படியும் கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்படும். அதிலும் குளிர் காலத்தில் எதையாவது சூடாக சாப்பிட வேண்டும் என்ற நம் வேட்கை காரணமாக உணவுக் கட்டுப்பாடு இருக்காது. ஆக, பல காரணங்களாலும் இந்த குளிர் காலத்தில் நம் கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று அடுத்தடுத்த விளைவுகளை சந்திக்க நேரிடுமே என்று நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அதற்குத் தான் எளிமையான தீர்வுகளை ஆயுர்வேதம் முன்வைக்கிறது.
லவங்க பட்டை டீ : உணவில் சுவை மற்றும் மனம் ஆகியவற்றுக்காக சேர்க்கப்படும் இலவங்க பட்டையில் நம் இதயத்தை காப்பதற்கான பலன்கள் நிறைந்துள்ளன. குளிர் நேரத்தில் சூடான இலவங்க பட்டை டீ அருந்தலாம். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் குறையும்.
குக்குலு : ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற ஒரு வகை பிசின் ஆகும். இதனை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். தினசரி மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும்.
நெல்லிக்காய் : வைட்டமின் சி சத்து கொண்ட நெல்லிக்காய் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். நெல்லிக்காய் ஜூஸ் அருந்தலாம் அல்லது ஊறுகாய், ஜாம் போன்ற வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
க்ரீன் டீ : க்ரீன் டீ-யில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது நம் ரத்தத்தை சுத்திகரிக்கும் மற்றும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும். தினசரி காலைப் பொழுதில் க்ரீன் டீ அருந்தி வரலாம். இதன் மூலமாக ரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும்.
அதே சமயம், உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க வேண்டுமெனில் ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து கொண்ட மீன்கள், பாதாம் பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். சிவப்பு நிற இறைச்சி, முழு கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.