சென்னை-யில் வீட்டு வாடகை விண்ணை முட்டுகிறது.. உங்க ஏரியா எப்படி..?!

சென்னையில் மழை வெள்ளம் வந்த காலத்தில் பல வீடுகள் காலியானது மட்டும் அல்லாமல், வெள்ளம் பாதிப்பு இருந்த பல பகுதிகளில் வீடுகளின் வாடகை குறைக்கப்பட்டது. இதேவேளையில் வெள்ள பாதிப்பு இல்லாத பகுதிகளில் வீடுகளின் வாடகை அதிகரிக்கத் துவங்கியது.
ஆனால் இன்று சென்னையில் நிலைமையே வேறு, தொடர்ந்து நிறுவனங்கள் சென்னையில் புதிய அலுவலகங்களை அமைத்தும், முதலீடும் செய்து வருவதால் சென்னைக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாக உள்ளது.
இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தற்போது வாடகை வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருவதால், வாடகையும் 10% முதல் 20% வரை உயர்ந்துள்ளது. இதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள், அவை என்ன என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: வேலைவாய்ப்புகள் அதிகரிப்பால், புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, சப்ளை – டிமாண்ட் பிரச்சனையில் வீட்டு வாடகை அதிகரித்து வருகிறது.
WFH முடிவு: கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்த (Work from Home) நிலையில், தற்போது அனைத்து நிறுவனமும் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்குச் சென்று பணிபுரிய உத்தரவிட்டு உள்ளது. இதனால் நகரத்தின் புற பகுதிகளில் வசித்தவர்கள், மையப்பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர். இது வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிப்புக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
சொத்து வரி உயர்வு: சமீபத்தில் சென்னை மாநகராட்சியால் சொத்து வரி உயர்த்தப்பட்டதும் வாடகை உயர்வுக்கு ஒரு காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். சொத்து வரி உயர்வைக் காரணமாகக் காட்டி வாடகை உயர்த்தப்படுவதாகச் சொல்கிறார்கள் வீட்டு உரிமையாளர்கள்.
சென்னையில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளான மாதவரம், கொளத்தூர் மற்றும் பெரம்பூரில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை மற்றும் ஆர்ஏ புரம் போன்ற மையப்பகுதிகளில் சொகுசு வீடுகளின் வாடகை ரூ.75,000 முதல் ரூ.3 லட்சம் வரை இருப்பதாகச் சொல்கிறார்கள் ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள்.
சென்னையில் மையப்பகுதிகளான நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் மற்றும் மந்தவெளி-யில் பழைய வீடுகள், ஆடம்பரம் இல்லாத வீடுகளின் வாடகை ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை உள்ளது.
சென்னையின் பிற பகுதிகளில் இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளின் வாடகை ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை உள்ளது. இது குடியிருக்கும் பகுதியின் சமூக பொருளாதார அமைப்பு, வீட்டின் பழமை மற்றும் அதன் மீதான முதலீடு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
சென்னையில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வாடகை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுக் குடும்ப முறை குறைந்து, அணு குடும்ப முறை அதிகரித்து வருகிறது. இதனால் தனித்தனி வீடுகளுக்கான தேவை உருவாகிறது. இதேபோல் வெளிமாநிலத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் சென்னைக்குக் குடியேறும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.
மேலும் நீங்கள் சென்னைவாசியாக இருந்தால் நீங்கள் தங்கியிருக்கும் வீட்டின் வாடகை மற்றும் ஏரியா-வை கமெண்ட் பண்ணுங்க.