செங்கடலில் கப்பல்களை குறிவைக்கும் ஹவுதி.. “பின்னால் இருப்பதே ஈரான் தான்!” அமெரிக்க உளவு துறை பகீர்
செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான ஹவுதிக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இதின் பின்னியில் ஈரான் உள்ளதாக அமெரிக்கா உளவுத் துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கே இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் போர் பிராந்திய போராக மாறுமோ என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க ஹமாஸுக்கு ஆதரவாக எனச் சொல்லி ஹவுதி படை செங்கடல் பகுதியில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்க உளவுத் துறை: இதற்கிடையே அமெரிக்கா அரசு சில ரகசிய உளவுத் தகவல்களை பொது வெளியில் பகிர்ந்துள்ளது. அதில் செங்கடலில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எதிராக ஈரான் திட்டமிட்டுவருவதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை கடந்த நான்கு வாரங்களாகவே செங்கடலைக் கடக்கும் 10 +வணிக கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அமெரிக்க உளவுத்துறை இப்போது வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில், “காசா விவகாரத்தில் ஈரான் அளித்த ஆதரவு தொடர்ந்தே ஹவுதி இஸ்ரேல் மற்றும் செங்கடலில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள். ஹவுதி செயல்பாட்டில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று ஈரான் கூறினாலும் கள நிலவரம் இதுவாகவே இருக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னணியில் ஈரான்: அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சின் செய்தித்தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் மேலும் கூறுகையில், “ஈரான் நினைத்தால் ஹவுதிக்களுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தலாம். ஈரான் இல்லாமல் இல்லாமல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக வரும் கப்பல்களைக் கண்காணித்துத் தாக்குதல் நடத்த ஹவுதிகளால் முடியாது.
மேலும், கடலில் கப்பல் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளை ஈரான் தான் ஹவுதிகளுக்கு வழங்கியுள்ளனர். ஈரான் வழங்கி வரும் இந்த ஆதரவால் தான் ஹூவுதிகளால் கடந்த நவ. மாதம் முதல் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த முடிந்துள்ளது. ஹவுதி தங்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கூட ஈரானால் வழங்கப்பட்டவை தான்” என்றார்.
ராணுவ அதிகாரி: இதற்கிடையே அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் செங்கடலில் ஈரானியர்கள் தான் ஆக்டிவாக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அங்கே உள்ள ஹவுதிக்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டு கப்பல்கள் அந்த பாதையில் செல்லவே அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பெரும்பகுதி வர்த்தகம் கப்பல்களில் தான் நடக்கிறது. அப்படி கடல் வர்த்தகத்தில் முக்கியமான பாதைகளில் ஒன்றாகச் செங்கடல் இருக்கிறது. எனவே, இந்த பாதையில் நடக்கும் தாக்குதல்கள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. குறைந்தது 44 நாடுகள் ஹவுதிக்கள் நடத்திய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
தெற்கு செங்கடலில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதும் அந்த வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற கடல்சார் கூட்டணியை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளது.
ஹவுதி சொல்வது என்ன: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இந்தத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. ஹமாஸ் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹவுதி இதுபோல செங்கடலில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் இஸ்ரேல் கப்பல்களையே தாக்குவதாக ஹவுதிகள் கூறினாலும், உண்மையில் பல கப்பல்களை பல்வேறு நாடுகளுக்குச் சொந்தமானவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹவுதிக்கலின் இந்தத் தாக்குதலால் எண்ணெய் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் செங்கடலில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.