எப்படி ஒரே ஓவரில் 3 நோ-பால் போட முடியும்.. மேட்ச் ஃபிக்சிங் செய்தாரா சோயப் மாலிக்? ஒப்பந்தம் ரத்து!
வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஃபார்சூன் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய சோயப் மாலிக், ஹாட்ரிக் நோ-பால் வீசியதால் அவர் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சானியா மிர்சாவை விவாகரத்து செய்த சோயப் மாலிக், உடனடியாக நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். சானியா மிர்சாவின் விவாகரத்திற்கு சோயப் மாலிக்கின் திருமணத்தை மீறிய உறவே காரணம் என்று கூறப்பட்டு வந்தது. சோயப் மாலிக் 3வது திருமணத்தால் அவர் மீது அதிகளவில் கவனம் குவிந்தது.
இந்த நிலையில் திருமணம் செய்த உடன், நேரடியாக வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார். ஃபார்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடி வரும் அவர், டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன்பின் குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சோயப் மாலிக் பவுலிங் செய்த போது சர்ச்சையில் சிக்கினார்.
சோயப் மாலிக் வீசிய ஒரே ஓவரில் 3 நோ-பால் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் டெத் ஓவரில் பேட்டிங் செய்த போது 6 பந்துகளில் வெறும் 5 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சோயப் மாலிக் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டாரா என்ற விவாதம் தொடங்கியது. இதனால் பலரும் சோயப் மாலிக்கை தீவிரமாக விமர்சிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் ஃபார்சூன் பார்ஷல் அணி சோயப் மாலிக் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இவருக்கு பதிலாக அஹ்மத் ஷேசாத்தை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் வங்கதேசத்தில் இருந்து துபாய்-க்கு திரும்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து சோயப் மாலிக் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டாரா என்ற விசாரணையை பிபிஎல் நிர்வாகம் மற்றும் ஐசிசி தொடங்கும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்களில் பலரும் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளதால், இந்த விவகாரம் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.