இந்தியாவின் நம்பர் 1 செய்தி செயலியாக InShorts உருவானது எப்படி?
இதெல்லாம் சரிப்பட்டு வராது என கூறப்பட்ட யோசனைகள் தான் இன்று பெரிய அளவில் வெற்றி அடைந்த தொழில்களாக இருக்கின்றன. அப்படி டெல்லி ஐஐடியில் படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய இளைஞர் ஒருவர் உருவாக்கிய செய்தி செயலி இன்று மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.
2009 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தை சேர்ந்த அசார் இக்பால் டெல்லி ஐஐடியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் படிப்பதற்காக சேர்ந்தார். ஆனால் மூன்று ஆண்டுகளில் படிப்பை பாதியிலேயே கைவிட்டு வெளியேறினார்.
டெல்லி ஐஐடியில் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வெளியேறிய அவர் செய்தி துறையில் புதிதாக ஒன்றை தொடங்க வேண்டும் என விரும்பினார். உடனடியாக நண்பர்களோடு இணைந்து பேஸ்புக்கில் ஒரு பக்கத்தை துவங்கினார்.
அதாவது 60 வார்த்தைகளில் ஒரு செய்தியை மக்களுக்கு தருவது தான் அவரது நோக்கம். 2013 ஆம் ஆண்டில் அவர் தொடங்கிய நியூஸ் இன் சார்ட்ஸ் பக்கம் பேஸ்புக்கில் 30 நாட்களில் 20 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றது. அந்த ஆண்டு இறுதிக்குள் அது 10 லட்சமாக உயர்ந்தது.
ஃபிளிப்கார்ட் நிறுவனரின் உதவியால் செயலி உதயம்: திடீரென ஒரு நாள் flipkart நிறுவனரும் ஐஐடி டெல்லி அலுமினியுமான சச்சின் பன்சால் தன்னை வந்து காணும்படி அசார் இக்பாலுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அந்த சந்திப்பு தான் நியூஸ் இன் சார்ட்ஸ் என்பதை இன் ஷார்ட்ஸ் (IN SHORTS) என்ற செயலியாக மாற்றியது.
2015ஆம் ஆண்டு Inshorts செயலி செயல்பாட்டுக்கு வந்தது. 60 வார்த்தைகளில் ஒரு செய்தியை கூறியது மக்களிடையே வரவேற்பை பெற்றது. ஆங்கில மொழியில் மட்டுமின்றி பிராந்திய மொழிகளுக்கும் விரிவுப்படுத்த விரும்பினார்.
அதுதான் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. இதன் வளர்ச்சியை கண்டு டைகர் குளோபல் நிறுவனம் 25 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதனை தொடர்ந்து இன் ஸ்டார்ஸ் வீடியோ, இன்ஃபோகிராபிக்ஸ், பிளாக்குகள் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கியது.
இதனால் 4 மாதத்திலேயேய் சுமார் 10 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர். எனவே டைகர் குளோபல் நிறுவனம் 127 கோடி ரூபாயை மீண்டும் முதலீடு செய்தது. இது தவிர செயலியிலேயே சிறிதாக விளம்பரங்களையும் வெளியிட தொடங்கினர். இதன் மூலம் 2017ஆம் ஆண்டில் இன்ஷார்ட்ஸ் 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.
பப்ளிக் செயலிக்கு நல்ல வரவேற்பு: 2019ஆம் ஆண்டில் மக்களே உள்ளூரில் நடக்கும் செய்திகளை எடுத்து அனுப்பும் வசதி கொண்ட பப்ளிக் (PUBLIC) செயலியைகொண்டு வந்தார். இது நல்ல ஹிட்டாகி 2019ஆம் ஆண்டில் நிறுவன வருவாயை 50 கோடியாக்கியது.
2021ஆம் ஆண்டில் இன்ஷார்ட்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிகை 1 கோடியாகவும், பப்ளிக் செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6 கோடியாகவும் அதிகரித்தது.
தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 4,000 கோடியாக உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் ஆங்கில செய்தி செயலியாக இன்ஷார்ட்ஸ் திகழ்கிறது. பப்ளிக் செயலி நம்பர் ஒன் லோக்கல் செயலி என்ற பெருமையை பெற்றுள்ளது.