கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என எப்படி அழைப்பீர்கள்?: வெளுத்து வாங்கிய விசிக!

தமிழ்நாடு ஆளுநர் ரவி தனது மனைவியுடன் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமநாதசுவாமி கோயிலுக்கு நேற்று சென்று சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டிருந்தது.

அதில், ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் மற்றும் லேடி கவர்னர் ஆகியோர் தரிசனம் மற்றும் பூஜை செய்து, தமிழக சகோதர, சகோதரிகளின் நலனுக்காகவும் பாரத மாதாவின் மேன்மைக்காகவும் வேண்டிக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுநரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்கும் ஆளுநர் மாளிகையின் செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது எக்ஸ் தளத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில், ” மக்களாட்சி கோட்பாடு அடிப்படையில் ஆளுநர் என்பதே தேவையில்லாத ஒரு பதவி என பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளும் விவாதங்களும் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் எதிர்ப்பு என்பது கடவுள் எதிர்ப்பைப்போலவே கோட்பாட்டு வலிமையாகவே தொடர்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு ஆளுநர் பணி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ரவி அவர்கள், வந்த வேலையை மறந்து விட்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். சனாதனம், குழந்தைத் திருமணம் குறித்து பெருமைப்படுவது, ராம ராஜ்யம் அமைப்போம் என்பது, தமிழ்நாட்டை தமிழகமாக
சிறுமைப்படுத்துவது என அவரின் போக்குத் தொடர்கிறது.

சமீபகாலமாக போகிற இடங்களுக்கெல்லாம் தனது மனைவியையும் அழைத்துச் செல்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், அவருடைய மனைவிக்குமான செலவினங்களும் தமிழ்நாடு அரசையே சாரும். அது கூட பரவாயில்லை.

ஆனால், ஆளுநர் மாளிகையோ, தொடர்ந்து ஆளுநரின் மனைவி திருமதி லட்சுமி ரவியை லேடி கவர்னர் என குறிப்பிட்டு வருகிறது. கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்க அரசியலமைப்புச் சட்டம் வழி காட்டியுள்ளதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மனைவியை லேடி முதல்வர் என எந்த மாநிலத்திலாவது அழைக்கிறார்களா?

எதற்காக ஆளுநர் மாளிகை இப்படியான மலிவான அரசியலைச் செய்கிறது? ஆளுநரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்கும் ஆளுநர் மாளிகை, அவரது மகனை, பேரனை எப்படி அழைக்கும்? ஆளுநர் மாளிகையின் அதிபுத்திசாலித்தனத்தைக் கண்டு ஜனநாயகமே சிரிக்கும்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *