இந்திய ஐடி துறைக்கு இவ்வளவு பெரிய பாதிப்பா.. எத்தனை பேருக்கு வேலை பறிபோகுமோ..?!
இந்திய ஐடி துறையில் 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த பணியாளர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் உருவான புதிய வேலைவாய்ப்புகளைப் பார்க்கும் போது இரட்டிப்பு இலக்கை 2028க்குள் எட்டிவிடலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால் இந்த இலக்கை எட்ட முடியாமல் போகலாம் என்று ஐடி துறை நிபுணர்கள் கூறுகின்றனர், இதற்கு முக்கியமான காரணம் ஏஐ என்றால் மிகையில்லை.
உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாகத் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை மந்தமடைந்து வருவதோடு, செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அச்சமும் அதிகமாகவே உள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இந்திய ஐடி துறையில் பணியாற்றி வரும் 54 லட்சம் ஊழியர்கள் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 75 லட்சமாக மட்டுமே அதிகரிக்கக் கூடும், 1 கோடி என்ற இலக்கை அடைவது மிகவும் கடினம் எனச் சந்தையின் போக்கு கூறுகிறது.
இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆட்டோமேஷன் செய்யப்படுவதால் பணியாளர்களின் தேவை பெரிய அளவில் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பொருளாதார காரணிகளும் ஐடி துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இத்தகைய ஆட்டோமேஷன் ஐடி துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறையிலும் பணிநீக்கத்தை அதிகரித்துவிடும்.
இதில் இருந்து 2025 ஆம் ஆண்டில் மீண்டும் இந்திய ஐடி துறை புத்துணர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்று Zensar Technologies நிறுவனத்தின் முன்னாள் CEO மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான 5F வேர்ல்ட் நிறுவனர் கணேஷ் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ChatGPT மற்றும் ஜென்ஏஐ மூலம், கோடிங் எழுதும் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று AI தாக்கம் குறித்து பேசும் கணேஷ் நடராஜன் ஏஐ மூலம் சில நன்மை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
AI வந்த பின்பு, தற்போது ஒரு ஐடி கட்டமைப்பை நிர்வாகம் செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது, இதேபோல் ஐடி ஊழியர்களின் உற்பத்தித் திறன் சுமார் 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது எனக் கூறுகிறார்.
இந்திய ஐடி துறையைப் பொருளாதார மந்த நிலை பாதிப்பு என்பது தற்காலிக நிகழ்வு என்றாலும், இந்திய ஐ.டி. சேவைத் துறைக்கு மிகப்பெரிய சவால் தொழில்நுட்ப சீர்குலைவு தான், அதில் செயற்கை நுண்ணறிவு மையமாக இருக்கும் என்று துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.