அதிகாலையில் சிரமமின்றி சீக்கிரமாக எழுந்து கொள்வது எப்படி? ஈசி டிப்ஸ் இதோ!
பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்து, தன் கடமைகளை முடித்துக்கொண்டு சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இரவு தூங்கும் பொழுது இருக்கும் அந்த மன தைரியம், காலையில் எழுந்து கொள்ளும் நேரம் வரும் போது இருப்பதில்லை. இதனாலேயே பலர், தங்கள் வாழ்க்கையை மாற்ற நினைக்கும் செயல்களை செய்து கொள்ளாமல் அப்படியே இருந்து விடுகின்றனர். காலை எழுந்து கொள்வதை தடுக்கும் சோம்பேறித்தனத்தை விட்டொழித்து, அலரம் அடித்தவுடன் ‘டான்’னு எழுந்து கொள்வது எப்படி? இங்கு அதற்கான டிப்ஸை பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு, அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து நமக்கான வேலைகளை முடித்துக்கொண்டு அன்றைய நாளை நன்றாக கடக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிகாலையில் சீக்கிரமாக எழுவது சுய ஒழுக்கமான பழக்கமும் கூட. அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து கொள்வதால் மனம் தெளிவடையும், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆனால், பலருக்கு காலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது பல சமயங்களில் சோம்பேறித்தனமும் தூக்கமும் தொற்றிக்கொள்ளும். இது இல்லாமல், அதிகாலையில் சீக்கிரம் எழுந்து கொள்வது எப்படி?
காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள, இரவு சீக்கிரமாக தூங்க செல்ல வேண்டும். அப்போதுதான் உடலுக்கு மனதுக்கும் சரியான தூக்கம் கிடைத்து, அதிகாலையில் சீக்கிரமாக விழிக்க முடியும். இரவு 9 மணிக்குள்ளாக தூங்க சென்றால் சிறந்தது.
தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு செல்போன், லேப்டாப் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் ஒதுக்கி வைத்து விட வேண்டும். அப்படி செய்தால்தான் எந்த வித தடையுமின்றி படுத்தவுடன் தூக்கம் வருமாம்.
இரவில் பசியெடுத்தால் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இவற்றால் அஜீரண கோளாறுகள், வயிறு உபாதைகள் ஏற்படலாம். எனவே, இரவில் லைட்-வெயிட் உணவாக எடுத்துக்கொள்ளவும்.
தூங்கும் போது உங்கள் மொபைல் போன்களை சைலண்ட் மோடில் போட்டு விடுங்கள். இதனால் உங்கள் தூக்கம் கெட்டுப்போகாமல் இருக்கலாம்.
உழைப்பாளிகள் பலர் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு ‘இந்த வேலையை இன்று செய்து முடிக்கவில்லை கம்பெனியே நாளை இயங்காது’ என்பது போல இரவில் வெகு நேரம் கண்விழித்து வேலை பார்ப்பர். அப்படியெல்லாம் செய்தால் அது அந்த தனி நபரை உடல் ரீதியாக பாதிக்கும் என்பது பலருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து விட்டு இரவில் வேலை பார்த்து தூக்கத்தை கெடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
அலாரம் அடிக்கையில் நீங்கள் நடந்து சென்று அதை ஆஃப் செய்யும் வகையில், தூரமாக உங்கள் மொபைல் போனை/கடிகாரத்தை தள்ளி வைக்கவும். இதனால், நீங்கள் தூக்கத்தில் இருந்து விரைவில் எழுந்து கொள்ள முடியும்.