கால்சியம் நிறைந்த ‘சத்து உருண்டை’ வீட்டிலேயே எப்படி செய்யலாம்..? இதுதான் ரெசிபி..!
உடலின் நரம்பு மண்டலம், திசுக்களின் இணைப்பு, இதயம் மற்றும் செரிமான அமைப்பு போன்ற அனைத்து முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் கால்சியம் முக்கியம். அதுமட்டும் அல்ல, பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமையை உறுதிப்படுத்தவும் கால்சியம் இன்றியமையாதது ஆகும்.
உடலுக்கு போதுமான கால்சியம் சத்துகள் கிடைக்கவும், எலும்புகள் பலம் அடையவும் உதவும் ‘சத்து உருண்டை’ வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே காணலாம்…
தேவையான பொருட்கள் :
கொப்பரை தேங்காய் – 1
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
எள் 1 – 100 கிராம்
ஏலக்காய் – 2
வெல்லம் – 1/2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கொப்பரை தேங்காயை குட்டி, குட்டியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் நறுக்கி வைத்துள்ள கொப்பரை தேங்காயை சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு : தேங்காய் சேர்த்தால் விரைவில் கெட்டுவிடும், கொப்பரை தேங்காயை வறுத்து சேர்க்கும்போது அது நீண்ட நாட்கள் வரும்.
அடுத்து அதே கடாயில் வேர்க்கடலையையும் சேர்த்து அதையும் நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.
ஏலக்காய் மற்றும் எள்ளையும் அதே கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். எள் உடனடியாக வறுபட்டுவிடும். எனவே கவனமாக வறுக்கவும்.
வறுத்து வைத்துள்ள அனைத்தையும் நன்றாக ஆறவைத்து எடுத்து கொக்கொள்ளுங்கள்.
பிறகு காய்ந்த ஈரமில்லாத ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.
ஆனால் வறுத்த எள்ளில் 2 டேபிள் ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு : முதலில் கொப்பரை தேங்காயை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் எள், வேர்க்கடலை, வெல்லம், ஏலக்காய் என அனைத்தையும் தனித்தனியாக கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் பொடியாக அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து அதனுடன் வறுத்த முழு எள்ளையும் சேர்த்து நன்றாக கைகளால் பிசைந்து உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சத்து உருண்டை தயார்..
இதை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதும் உடலுக்கு அவ்வளவு நன்மை பயக்கும்.