மொறுமொறு ‘காய்கறி கட்லெட்’ வீட்டிலேயே ஈசியாக எப்படி செய்யலாம்?

காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்றாலும் சிலர் அதை உண்ணாமல் ஒதுக்கி விடுவார்கள். அசைவ உணவுகளை உண்ணும் அளவிற்கு காய்கறிகளை சிலர் விரும்பமாட்டார்கள்.

அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்களுக்காத்தான் இந்த ரெசிபி. பொதுவாக என்னதான் நாம் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் கடைகளில் கிடைக்கும் உணவு வகைகளை தான் பலரும் விரும்பி உண்பார்கள்.

அதில் மிகவும் முக்கியமான ஒன்று அசைவம் மற்றும் சைவ வகைகளில் செய்து விற்கப்படும் கட்லெட் தான். மாலை வேளைகளில் இதை பலரும் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.

எனவே சிலருக்கு பிடிக்காத காய்கறிகளை கொண்டு பலருக்கும் பிடித்த இந்த கட்லெட்டை வீட்டிலேயே ஆரோக்கியமாக மொறு மொறுவென்று செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்.

வீட்டிலேயே சுவையான காய்கறி கட்லெட்டை எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்..

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 5
கேரட் – 1
பீட்ரூட் – 4 டேபிள் ஸ்பூன்
பீன்ஸ் – 6
பச்சை பட்டாணி – 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
சிவப்பு மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உலர்ந்த மாங்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
மைதா – 1/2 கப்
பிரட்தூள்கள் – ½ கப்
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – 1 டீஸ்பூன்
தண்ணீர்

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் ஊற்றி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட் மற்றும் பீன்ஸ் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அடுத்து அதில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உலர்ந்த மாங்காய் பொடி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நான்கு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்துவிட்டு அதை மூன்று நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கி கட்லெட் செய்யும் பதத்திற்கு வந்தவுடன் தேவையென்றால் உப்பு சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து அதை ஆறவிடவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மைதா மாவு, உப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள பிரட்தூள்களை போட்டு கொள்ளுங்கள்.

தற்போது தயாரித்து வைத்துள்ள கட்லெட் மாவை உங்களுக்கு விருப்பமான வடிவில் ரெடி செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதை கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையில் போட்டு எடுத்து அதை அப்படியே பிரட்தூள்களில் போட்டு பிரட்டி ஒரு தட்டில் தனித்தனியே வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கட்லெட் வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் நன்றாக சூடானதும் தயாரித்து வைத்துள்ள கட்லெட்டை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரிக்கவும்.

கட்லெட் நன்றாக வெந்து பொன்னிறமாக மாறியவுடன் எடுத்தால் சூடான சுவைமிகுந்த காய்கறி கட்லெட் ரெடி.

இதை நீங்கள் கெட்சப் சேர்த்து சாப்பிட்டால் ருசி அள்ளும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *