உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுவென்று இருக்கும் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பிஷ் பிங்கர்ஸ் எப்படி செய்வது.?
பெரும்பாலும் நாம் மீனை வைத்து குழம்பு, வறுவல் என செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஹோட்டல்களுக்கு சென்றால் பலரும் விருப்பப்பட்டு வாங்கி சாப்பிடுவது என்னவோ பிஷ் பிங்கர்ஸ் தான். உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுவென்று இருக்கும் இந்த பிஷ் பிங்கர்ஸ் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு.
ஆனால் பிஷ் பிங்கர்ஸ் சாப்பிட இனி நீங்கள் ஹோட்டல்களுக்கு செல்ல தேவையில்லை. ஏனென்றால் வீட்டிலேயே எளிதாக எப்படி ஹோட்டல் ஸ்டைலில் பிஷ் பிங்கர்ஸ் உங்கள் குடும்பத்தாரை அசத்தலாம் என்று இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்…
தேவையான பொருட்கள் :
வஞ்சரம் மீன் அல்லது முள் இல்லாத மீன் – 1/2 கிலோ
முட்டை – 1
மைதா – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
பிரட் தூள் – தேவைக்கேற்ப
எலுமிச்சை பழச்சாறு – 1/2 பழம்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் வஞ்சரம் மீன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து அலசி நமது விரல் அளவிற்கு நறுக்கி ஒரு பௌலில் வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதில் எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
பிறகு முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை நன்றாக அடித்து கொள்ளுங்கள்.
தற்போது அடித்த முட்டையை மீன் துண்டுகளுடன் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
பிறகு அதனுடன் மைதா மாவை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக மீனோடு சேர்த்து கலந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
30 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.
இப்போது ஊறிய மீன் துண்டுகளை எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டவும்.
எண்ணெய் சூடானதும் மீன் துண்டுகளை எண்ணெய்யில் போட்டு நன்றாக வெந்து பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மொறுமொறு பிஷ் பிங்கர்ஸ் சாப்பிட ரெடி. இதை நீங்கள் கெட்சப் மற்றும் மயோவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.