ருசியான சுரைக்காய் பாயசம் செய்வது எப்படி.?

இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் அனைத்து வயதினருக்கும் பிடித்ததில் ஒன்று ‘பாயசம்’. பாயசத்தில் சேமியா பாயசம், அவல் பாயசம், அரிசி பாயசம், ஓட்ஸ் பாயசம், பருப்பு பாயசம் என பல வகைகள் உள்ளன.

ஆனால் நாம் இன்று இங்கே தெரிந்துகொள்ள போகும் ரெசிபியானது ‘சுரைக்காய் பாயசம்’ ஆகும். சுரைக்காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. மேலும் இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ள தீர்வாகவும் கூறப்படுகிறது.

தேவையான பொருட்கள் :

நடுத்தர சுரைக்காய் – 1

சர்க்கரை – 1/4 கப்

பால் – 3 கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 3

குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை :

முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் தண்ணீர் கலக்காத முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி அடிக்கடி கலந்துவிட்டு பாதியளவு வரும்வரை குறைந்த தீயில் நன்றாக கொதிக்கவிடவும்.

இதற்கிடையே சுரைக்காயை எடுத்து அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி அதை பொடியாக துருவி கொள்ளுங்கள்.

மேலும் சுரைக்காயில் தண்ணீர் இருக்கும் எனவே துருவிய சுரைக்காயை நன்றாக பிழிந்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நெய் சேர்த்து உருகியதும் முந்திரி மற்றும் பாதாம் போட்டு நன்றாக வறுக்கவும்.

பின்னர் அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து நன்றாக வறுத்து அவற்றை ஒரு தட்டில் மாற்றி கொள்ளுங்கள்.

தற்போது அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு அதில் துருவி வைத்துள்ள சுரைக்காயை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை சுமார் 6 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

பால் நன்றாக கொதித்து பாதியளவு வந்ததும் நன்கு நுணுக்கிய ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

சர்க்கரை நன்றாக கரைந்ததும் வதக்கி வைத்துள்ள சுரைக்காய் சேர்த்து 6 நிமிடங்களுக்கு மிதமான தீயில் ஓரளவிற்கு கெட்டியாகும் வரை விடவும்.

பின்னர் இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்றும் திராட்சையை சேர்த்து நன்கு கலந்துவிட்டு இறக்கினால் சுவையான சுரைக்காய் பாயசம் ரெடி…

இந்த சுரைக்காய் பாயசத்தை நீங்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ சாப்பிடலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *