சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஆரோக்கியம் நிறைந்த மிருதுவான சிறுதானிய இட்லி எப்படி செய்வது.?
சிறுதானிய வகைகளில் அதிகளவில் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் உள்ளன. இவற்றை நாம் சாப்பிட்டு வந்தால் இவை நமது உடலுக்கு ஆற்றலையும், வலுவையும் வழங்குகின்றன.
எனவே இன்று நாம் பார்க்கபோகும் ரெசிபியில் சிறுதானியங்களை கொண்டு எவ்வாறு ஆரோக்கியமான மெதுமெது இட்லி செய்யலாம் என்று தான். இந்த இட்லி மாவிற்கு நாம் அரசி சேர்க்க தேவையில்லை எனவே இது நீரழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சாமை – 1 கப்
வரகு – 1 கப்
திணை – 1 கப்
குதிரைவாலி – 1 கப்
கருப்பு கவுனி அரிசி – 1 கப்
உளுந்து – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள சிறுதானியங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
அதே போல் எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்றாக அலசி இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஊற வைத்த உளுந்து மற்றும் வெந்தயத்தை நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஊறவைத்த சிறுதானியங்களையும் சேர்த்து ரவை பதத்திற்கு லேசாக கொரகொரவென்று அரைத்துக் எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு இரண்டு மாவையும் ஒரே பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.
இப்போது மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் நன்கு புளித்த மாவை கரண்டி கொண்டு நன்றாக கலந்துவிட்டு இட்லி தட்டில் ஊற்றி பத்து நிமிடம் வரை வேகவிடவும்.
இட்லி நன்றாக வெந்தவுடன் சுட சுட எடுத்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.
மிருதுவான இந்த இட்லிக்கு கார சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.