மசாலா அரைத்து வைத்த காரமான முட்டை கிரேவி செய்வது எப்படி..?
கடையில் வாங்கினாலும் சரி அல்லது வீடுகளில் செய்தாலும் சரி எப்போதுமே முட்டை மசாலா கிரேவி நொடியில் தீர்ந்துவிடும். ஏனெனில் பொதுவாக முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் அதை செமி கிரேவி வடிவில் காரசாரமாக செய்து கொடுத்தால் சொல்லவா வேண்டும்.
அந்த வகையில் இன்று இங்கே நாம் பார்க்க போகும் இந்த முட்டை கிரேவியானது எப்படி மசாலா அரைத்து வைத்து தயாரிக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்த முட்டை மசாலா கிரேவியை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, நாண் உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க தேவையானவை :
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – ஒரு கைப்பிடி
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி
முட்டை கிரேவி செய்ய தேவையானவை :
அவித்த முட்டை – 3
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் முட்டைகளை வேகவைத்து அதன் ஓடுகளை நீக்கி இரண்டாக வெட்டி தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மசாலா அரைக்க எடுத்து வைத்துள்ள நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு மற்றும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசிய அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிவைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்து மிதமான தீயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் நிறம் மாறி நன்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்க்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிய வெந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
அதன் பச்சை வாசனை போய் நன்றாக வதங்கியவுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலந்து நன்கு சமைக்கவும்.
இது கிரேவி பதத்திற்கு வந்து எண்ணெய் பிரிந்ததும் வெட்டி வைத்துள்ள அவித்த முட்டைகளை சேர்க்க வேண்டும்.
பிறகு அதனுடன் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி கிரேவியை மூடி இரண்டு நிமிடங்களுக்கு சமைக்கவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பார்த்தால் ருசியான முட்டை மசாலா கிரேவி சூடாக பரிமாற தயாராக இருக்கும்.