பிறந்த குழந்தைக்கு விட்டமின் டி தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது..? பெற்றோர்களுக்கான டிப்ஸ்..!
பச்சிளம் குழந்தைகள் மற்றும் வளருகின்ற இளம் சிறுவர், சிறுமியர்களுக்கு வைட்டமின் டி3 சத்து மிக, மிக அவசியம் ஆகும். குழந்தைகளின் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்ள உறுதுணையாக இருப்பது வைட்டமின் டி3 ஆகும்.
கால்சியம் சத்துதான் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகள் வலுவடையவும் காரணமாக அமைகிறது. அதேபோல நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, தசை வளர்ச்சி மற்றும் நரம்பியல் செயல்பாடு ஆகியவற்றிலும் கால்சியத்தின் தேவை மிக அவசியம் ஆகும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமாகவே வைட்டமின் டி சத்து கிடைக்கும் என்றாலும், பல சந்தர்பங்களில் அது போதுமானதாக இருப்பதில்லை.
குழந்தைகளுக்கு விட்டமின் டி எவ்வளவு தேவை :
தாய்ப்பால் அருந்துகின்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி 400 IU அளவில் வைட்டமின் டி சத்து தேவை என்று குழந்தைகள் நல மருத்துவர் தெரிவிக்கிறார். குழந்தைகள் தாய்ப்பாலை நிறுத்தும் வரையில் அல்லது வைட்டமின் டி சத்து சார்ந்த பவுடர் பாலை அருந்துகின்ற வரையில் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து திரவ வடிவில் கொடுக்கப்பட வேண்டும்.
அதே சமயம் குழந்தைகள் திரவ உணவுகளை சாப்பிடத் தொடங்கிவிட்டால் வைட்டமின் டி சத்து அடங்கிய உணவுகளை அவர்களுக்கு நாம் கொடுக்கலாம். சால்மன் மீன், முட்டை மஞ்சள் கரு மற்றும் செறிவூட்டப்பட்ட பருப்புகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமாக அவர்களுக்கான தினசரி வைட்டமின் டி சத்து தேவையை நிறைவு செய்ய முடியும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு விட்டமின் டி சத்து மாத்திரை தேவையா?
குழந்தை பெறும் சூழலில் உள்ள பெண்களில் 81 சதவீதம் பேர், வைட்டமின் சத்து பற்றாக்குறையுடன் உள்ளனர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. ஆக, தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கு செல்லுகின்ற சத்து பற்றாக்குறையாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.
குழந்தை பெறும் நிலையில் உள்ள தாய்மார்களுக்கு தினசரி 600 IU அளவுக்கு வைட்டமின் டி சத்து தேவையாகும். ஆனாலும், இதுவும் கூட குழந்தைகளுக்கான சத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானது கிடையாது.
வைட்டமின் டி சத்து மூலம் கிடைக்கும் பலன்கள் :
1. பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக அவசியம் ஆகும். அப்போதுதான் தொற்றுகள் மற்றும் நோய்களை தடுக்க முடியும். அதற்கு வைட்டமின் டி சத்து உதவும்.
2. குழந்தைப் பருவத்தில் தான் எலும்புகள் துரிதமாக வளர்ச்சி அடையும். அத்தகைய தருணத்தில் குழந்தைகளின் உடலானது கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை உறிஞ்சிக் கொள்ள வைட்டமின் டி3 அவசியம் ஆகும்.
3. குழந்தைகளுக்கு தசைகள் வளரவும், பலம் அடையவும் வைட்டமின் டி3 தேவை.
4. உறுப்புகள் மற்றும் திசு வளர்ச்சிக்கு வைட்டமின் டி சத்து மிக அவசியமாகும்.