HT Cinema Special: சினிமா செண்மென்டை மீறிய மாஸ் ஹீரோக்களும், ஒற்றை எழுத்து டைட்டில்களும்!
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்துவிட்டாலே, அந்த ஹீரோக்கள் பல காம்பிரமைஸ்களை ரசிகர்களுக்காகவும், படத்தயாரிப்பாளர்களுக்காகவும் செய்ய வேண்டி வரும்.
அத்துடன் தனது படங்களில் இடம்பெறும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பக்குவமாக யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருப்பதை பார்த்து கொள்ளும் கடமையும், பொறுப்பும் இயல்பாகவே வரக்கூடும்.
அந்த வகையில் மாஸ் ஹீரோக்கள் தங்களது படங்களின் டைட்டில் அனைவரையும் கவரும் விதமாக இருக்க வேண்டுமென விரும்புவார்கள். ஏனென்றால் படத்தின் டைட்டிலுக்கு கிடைக்கும் வரவேற்பை படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் ஒற்றை எழுத்தில் ஷார்ட்டாக தலைப்பு வைப்பது செண்டிமென்டாக ஒர்க் அவுட் ஆகாத விஷயமாகவே பார்க்கப்பட்டது. அப்படி தலைப்பில் உருவாகும் படங்கள் சரியாக போகாது என்கிற நம்பிக்கையும் பரவலாக இருந்து வந்தது.
ஆனால் இந்த செண்டிமென்டை உடைத்து தனது படங்களுக்கு ஒற்றை எழுத்தில் தலைப்பு வைத்த மாஸ் ஹீரோக்களும் இருக்கிறார்கள். அவ்வாறு ஒற்றை எழுத்து தலைப்புடன் தமிழில் வெளிவந்த மாஸ் ஹீரோக்கள் படங்களின் லிஸ்ட் இதோ
தீ – ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியான படம் தீ. இந்தியில் சசி கபூர், அமிதாப் பச்சன் நடிப்பில் 1975இல் வெளியான தீவார் படத்தின் ரீமேக் தான் தீ.
ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்த இந்த படம் ரஜினிக்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. படத்தில் ரஜினி ஹார்பரில் பணிபுரியும் தொழிலாளியாக நடித்திருப்பார்.
ஜி – அஜித்குமார்
அஜித்குமார் மாஸ் ஹீரோவாக உச்சத்தில் இருந்தபோது லிங்குசாமி இயக்கத்தில் 2005இல் வெளியான படம் ஜி. மாணவர்கள் அரசிலுக்கு வருவதை மையமாக கொண்ட கதையம்சத்தில் படம் அமைந்திருக்கும்.
ஆனால் இதே கதையம்சத்தில் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படம் இருந்ததுடன், ஜி படத்துக்கு முன்னரே அது வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜி படமும் சில பல சர்ச்சைகளாக நீண்ட நாள்கள் படமாக்கப்பட்டது. லிங்குசாமி தனது ஸ்டைலில் மாஸ்ஸாக படத்தை உருவாக்கியிருந்தாலும் படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. படமோ அஜித்துக்கு பிளாப்பாக அமைந்தது. இருந்தாலும் அஜித்தை கொண்டாடுவோர் இந்த படத்தை எப்போது வேண்டுமானாலும் கிளாசிக் என தூக்கி கொண்டாடும் விதமாக படத்தின் மேக்கிங் இருக்கும்.
ஐ – விக்ரம்
அந்நியன் வெற்றிக்கு பின்னர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் – விக்ரம் இரண்டாவது முறை கூட்டணி அமைத்த படம் ஐ. 2015 பொங்கல் வெளியீடாக வந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.
காதலன், ஜீன்ஸ், எந்திரன் படங்ளை போல் காதலை மையமாக வைத்து த்ரில்லர் படமாக ஐ படத்தை உருவாக்கியிருப்பார் இயக்குநர் ஷங்கர். விக்ரம் ஜிம் மாஸ்டராகவும், உடல் மெலிந்த கதாபாத்திரத்திலும் நடிப்பில் மிரட்டியிருப்பார். ஏஆர் ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின.