ஹங்கேரி அதிபர் ராஜினாமா… மக்களின் எதிர்ப்பால் பதவி விலகல் – காரணம் என்ன?
ஹங்கேரி நாட்டின் அதிபரான கட்டலின் நோவக், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய நபருக்கு மனிப்பு வழங்கியது பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
அதிபரின் முடிவால் அந்நாட்டு மக்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள்.
மக்களின் கோபத்தை அடுத்து கட்டலின் நோவக் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவு நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த தேசியவாத அரசின் குறிப்பிடத்தக்க அரசியல் ஊழலை வெளிப்படுத்துவதாக அமைந்தது. கட்டலின் நோவக் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வரும் வருகிறார்.
தொலைக்காட்சியில் அறிவிப்பு
தான் செய்த தவறையும், அதனால் ஏற்பட்ட அமைதியின்மையையும் ஒப்புக்கொண்ட நோவக் தொலைக்காட்சி நேரலையின் மூலம் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இந்த ராஜினாமா ஹங்கேரியின் ஆளும் கட்சியான Fidesz கட்சிக்கு எதிரான அரசியல் கொந்தளிப்பாக பார்க்கப்படுகிறது. இது பிரதமர் விக்டர் ஓர்பனின் தலைமையின் கீழ் ஜனநாயக அமைப்புகளை சீர்குலைக்க சதி திட்டம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஓர்பனின் முக்கிய கூட்டாளியும், Fidesz கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான நோவக், முன்னர் குடும்பங்களான அமைச்சராக பணியாற்றினார். மேலும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் மற்றும் குழந்தைப் பாதுகாப்பை ஆதரிப்பதில் நோவக் பெயர் பெற்றவர்.
மற்றொரு தலைவரும் ராஜினாமா
இருப்பினும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுகளை திரும்பப் பெறுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அவர் மன்னிப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
நோவக் தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கோரினார் என கூறப்படுகிறது. மற்றொரு முக்கிய Fidesz கட்சியின் தலைவரான ஜூடிட் வர்காவும் மன்னிப்பு கோரி ராஜினாமா செய்துள்ளார். வர்கா பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சி
நோவாக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உள்ள ஜனாதிபதி தலைமையகத்திற்கு வெளியே சுமார் 200 எதிர்ப்பாளர்கள் கூடி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் பரந்த மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.