ஹூண்டாய் கிரெட்டா-N லைன் காருக்கான முன்பதிவு ஆரம்பம்…பதிவு செய்வது எப்படி..?
மார்ச் 11-ம் தேதி ஹுண்டாயின் கிரெட்டா-N லைன் காரின் விற்பனை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வெறும் ரூ.25,000 செலுத்தி நீங்கள் இந்தக் காரை முன்பதிவு செய்துகொள்ள முடியும். கிரெட்டா-N லைன் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் மையங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது https://clicktobuy.hyundai.co.in/ என்ற இணையதள வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் N லைன் கார் வரிசையில் இது மூன்றாவது மாடலாகும். இதன் முன்னோடிகளைப் போலவே கிரெட்டா-N லைன் காரும் உட்புற, வெளிப்புற மாற்றங்களோடு ஸ்போர்டிவான தோற்றத்தில் உள்ளது. காரின் முன்பகுதியில் புதிதான காரில் அமைப்பு மற்றுன் ஆங்குலர் வடிவமைப்புடன் பம்பர் உள்ளது. ஹெட்லைட்டைப் பொறுத்தவரை பகலிலும் எரியும் அதே LED விளக்குகளே பொறுத்தப்பட்டுள்ளது.
காரின் ஓரங்களைப் பொறுத்தவரை, சிவப்பு நிற பட்டை நீள்வாக்கில் உள்ளது. இதுதவிர பெரிதான 18 இன்ச் சக்கரங்கள் காருக்கு ஆக்ரோஷமான தோற்றத்தை தருகிறது. காரின் பிரேக் கேலிபர் சிவப்பு நிறத்தில் உள்ளன. காரின் பின்புறத்தில் ஸ்போர்டிவான பம்பர் உள்ளது. மேலும் கிரெட்டா-N லைன் கார் தண்டர் ப்ளூ மற்றும் ப்ளாக் ரூஃப் போன்ற புதிய நிறங்களிலும் தற்போது கிடைக்கிறது.
காரின் உட்புறத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது இன்னும் முழுதாக தெரியவில்லை. டாஷ்போர்டு சிவப்பு நிற படையுடன் கருப்பு நிறத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தனித்துவமான ஸ்டீரிங் வீல், கியர் லிவர், மெடாலிக் பெடல் போன்றவையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான கிரெட்டா காரில் உள்ள அனைத்து வசதிகளும் கிரெட்டா-N லைன் காரின் உச்சபட்ச மாடலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கிரெட்டா-N லைன் காரின் இஞ்சினைப் பொறுத்தவரை, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இஞ்சினில் வருகிறது. இது அதிகபட்சமாக 160 bhp பவரையும் 253 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஸனைப் பொறுத்தவரை 7-ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. என்னடா இது ஆடோமெட்டிக் மட்டும் தான் உள்ளதா என கவலைப்பட வேண்டாம். 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்தக் காரில் உள்ளது. ஹூண்டாயின் மற்ற N லைன் மாடல்களைப் போலவே, இதிலும் மாற்றியமைக்கப்பட்ட சஸ்பென்சன் செட்டப், ஸ்டீரிங் டயனமிக்ஸ் மற்றும் இரண்டு முனைகளை உடைய ஸ்போர்டிவான புகைபோக்கியும் உள்ளது.
இப்போதைக்கு ஹூண்டாய் கிரெட்டா-N லைன் காருக்கு போட்டியாளர் என்று யாரும் கிடையாது. எனினும் கியா செல்டாஸ் X லைன், ஸ்கோடா குஷாக் மாண்டி கார்லோ போன்றவை இதற்கு சமமான வசதிகளையும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. வழக்கமான கிரெட்டா காரை விட N லைன் மாடலின் விலை ரூ.50,000 அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.