மாருதி, டாடா-வுக்கு ஷாக் கொடுத்த ஹூண்டாய்.. பணத்தை ரெடி பண்ணிக்கோங்க.. செம சான்ஸ்..!!
இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ-வுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது, குறிப்பாகப் பெரிய மற்றும் பிரபலமான நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் போது முதலீட்டாளர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். இதற்கு முக்கியமான உதாரணம் டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ லிஸ்டிங், இதேபோல் இந்தியாவில் கடந்த 20 வருடத்தில் ஒரு வாகன உற்பத்தி நிறுவனம் கூட ஐபிஓ வெளியிடவில்லை.
இதனால் ஆட்டோமொபைல் துறை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது மட்டும் இல்லாமல் இந்தியாவில் தனது நிறுவனத்திற்கு இருக்கும் மதிப்பை பணமாக்கிக்கொள்ளவும், ஐபிஓ பூம் வாய்பப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது தென் கொரியாவின் ஹூண்டாய்.
தென் கொரியாவின் ஹூண்டாய் பிராண்ட், இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் வேளையில், இதன் இந்திய பிரிவை இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கி சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு ஹூண்டாய் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடும் முடிவை கையில் எடுத்துள்ளது. இது மட்டும் நடந்தால் இந்தியாவில் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, காரணம் மாருதி சுசூகி நிறுவனத்திற்குப் பின்பு அதிகமாகக் கார்களை விற்கும் 2வது பெரிய நிறுவனமாக ஹூண்டாய் உள்ளது.
உலகளாவிய முதலீட்டு வங்கிகளான கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி, மோர்கன் ஸ்டான்லி, ஜேபி மோர்கன், பாங்க் ஆஃப் அமெரிக்கா, எச்எஸ்பிசி, டாய்ச் வங்கி மற்றும் யுபிஎஸ் ஆகியவை கடந்த வாரம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஹூண்டாய் தலைமை அலுவலகத்தில் IPO வெளியிடுவது குறித்துப் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலீட்டு வங்கியாளர்கள் ஹூண்டாய் இந்தியாவின் நிறுவனத்தின் மதிப்பை 22-28 பில்லியன் டாலராக மதிப்பிடு செய்துள்ளதாகவும், ஐபிஓ மூலம் இந்திய பங்குச்சந்தையில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வது மூலம் 3.3-5.6 பில்லியன் டாலர்கள் அதாவது 27,390 கோடி ரூபாயில் இருந்து 46,480 கோடி ரூபாய் வரையிலான தொகையைத் திரட்ட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து ஹூண்டாய் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது முக்கியமான விஷயம். 2022 ஆம் ஆண்டு எல்ஐசி வெளியிட்ட 21000 கோடி ரூபாய் ஐபிஓ தான் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருந்தது, ஹூண்டாய் திட்டமிட்டப்பட்டி 15 சதவீத பங்குகளை விற்பனை செய்தால் கூட எல்ஐசி சாதனையை முறியடிக்கும்.
ஹூண்டாய் இந்தியாவின் நிறுவனம் 28 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டால் மதிப்பீட்டளவில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அதானி பவர், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் ஓரம்கட்டப்படும். ஹூண்டாய் இந்தியா-வின் ஐபிஓ திட்டம் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ்-க்கு உண்மையிலேயே பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.