2023-ல் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையை பதிவு செய்து சாதனை படைத்த ஹூண்டாய் நிறுவனம்!
புதிய ஆண்டு துவங்கி உள்ள நிலையில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்தியா கடந்த 2023-ஆம் ஆண்டை ஒரு பெரிய சாதனையுடன் முடித்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவு உள்நாட்டில் அதிகபட்ச வாகனங்களை விற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 5,52,511 யூனிட்ஸ்களை விற்றிருந்த நிலையில், இந்த எண்ணிக்கையில் சுமார் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து நடந்து முடிந்த 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 6,02,111 வாகனங்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் இந்தியாவில் நுழைந்த பிறகு ஒரே ஆண்டில் 6 லட்சம் யூனிட்ஸ்களை தாண்டி தனது வாகனங்களை விற்றுள்ளது இதுவே முதல் முறை ஆகும். நிறுவனத்தின் இதற்கு முந்தைய அதிகபட்ச உள்நாட்டு விற்பனை 2022-ஆம் ஆண்டில் பதிவான 5,52,511 யூனிட்ஸ்கள் ஆகும். இதற்கு முன் என்று பார்த்தால் கடந்த 2018-ல் விற்கப்பட்ட 5,50,002 யூனிட்ஸ்கள் ஆகும்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதியை பொறுத்த வரை 2022-ஆம் ஆண்டில் 1,48,300 யூனிட்ஸ்களாக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டில் 10% அதிகரித்து 1,63,675 யூனிட்ஸ்களாக இருந்தது. அதே நேரம் விற்பனையின் மொத்த அளவு (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 2022-ஆம் ஆண்டில் 7,00,811 யூனிட்ஸ்களாக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டில் 9% அதிகரித்து 7,65,786 யூனிட்ஸ்களாக உள்ளது. 2023-ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 42,750 யூனிட்ஸ்களை விற்றுள்ளது, அதே நேரம் 13,700 யூனிட்ஸ்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை மொத்தம் 56,450 யூனிட்ஸ்களை எட்டியது.
இந்தியாவில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் 13 மாடல்களை வழங்குகிறது. இதில் Grand i10 Nios, i20 மற்றும் i20 N-Line என மூன்று ஹேட்ச்பேக்ஸ்களை விற்பனை செய்கிறது. Aura மற்றும் Verna என 2 செடான்களும் நிறுவனத்தின் விற்பனை பட்டியலில் உள்ளன. நிறுவனம் விற்று வரும் எஸ்யூவி கார்களில் எக்ஸ்டெர், வென்யூ, வென்யூ என்-லைன், கிரெட்டா, அல்காசர், டக்சன், கோனா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 ஆகியவை அடங்கும். 2023-ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு மிகவும் பிஸியான ஆண்டாகவே இருந்தது. கடந்த ஆண்டில் Exter, Ioniq 5 மற்றும் Verna-வை அறிமுகப்படுத்தியது. தவிர வென்யூ நைட் எடிஷன், கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் மற்றும் அல்காசர் அட்வென்ச்சர் எடிஷன் போன்ற ஸ்பெஷல் எடிஷன் மாடல்களையும் ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது.
SUV செக்மென்ட்டை பொறுத்த வரை 2023-ஆம் ஆண்டில் ஹூண்டாய் கிட்டத்தட்ட 60% பங்களிப்பை வழங்கி இருக்கிறது. 2023-ஆம் ஆண்டின் மதிப்புமிக்க இந்திய கார் (ICOTY) விருதை Exter வென்றது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் COO தருண் கார்க் பேசுகையில், எண்கள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவு உள்நாட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளது, இந்திய வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான மொபிலிட்டி பிராண்டாக ஹூண்டாயை அதிகம் தேர்ந்தெடுப்பதற்கான சான்றாக இருக்கிறது. அதே போல அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய, எங்கள் வருடாந்திர உற்பத்தி திறனை 50,000 யூனிட்ஸ்களுக்கு மேல் முன்கூட்டியே விரிவுபடுத்தினோம் என்றார். கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் தனது ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி திறனை 50,000 யூனிட்ஸ் அதிகரித்து 8,20,000 யூனிட்ஸ்களாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் இந்த ஆலையின் உற்பத்தி திறனை 10,00,000 யூனிட்ஸ்களாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.