“நான் உயிரோடு தான் இருக்கிறேன்..” நேற்று இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே..
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் பேசும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள பூனம் பாண்டே “ உங்கள் அனைவருடனும் முக்கியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் நான் இங்கே இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்னை கொல்லவில்லை, ஆனால் இது ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரை பறித்துள்ளது என்பது தான் சோகமான விஷயம். இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் பலர் இறந்துள்ளனர்.
மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது முற்றிலும் தடுக்கக்கூடியது, HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகள் அதற்கு மிகவும் முக்கியம். இந்த நோயால் யாரும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. எனவே விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் வலுப்படுத்துவோம், மேலும் ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த நோயின் அழிவுகரமான தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்போம்.” என்று கூறியுள்ளார். மேலும் #DeathToCervicalCancer என்ற ஹேஷ்டாகையும் அவர் பயன்படுத்தி உள்ளார்.
முன்னதாக நேற்று பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவின் ‘இறப்பு’ செய்தியை அவரது மேலாளர் உறுதிப்படுத்தினார். அவரின் குழு இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் அறிவித்தது. அந்த செய்தியில் “இந்தக் காலை எங்களுக்கு கடினமான ஒன்று. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
32 வயதே ஆன பூனம் பாண்டேவின் மரண செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினாலும், அதற்கு மரணத்தை போலியாக அறிவிப்பதா என்றும் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.