150 பேரில் நானும் ஒருத்தன்.. ராமர் கோவில் அரசியலா..? நடிகர் ரஜினி விளக்கம்..!
ராமர் முகம் திறந்து பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டுத்துறையினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்து வீடு திரும்பிய போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி ராமர் கோவிலுக்கு கண்டிப்பாக வருவேன்.” ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அயோத்தி ராமர் கோவில் திருவிழாவை ஆன்மீக நிகழ்ச்சியாக பார்க்கிறேன்.
ஒவ்வொருவரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ராமர் முகம் திறந்து பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன். அதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார். ராமர் கோவில் மத அரசியலாக பார்க்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அரசியலோ, ஆன்மிகமோ, தனக்கு அது ஆன்மீகம் என்றார்.