ரோடு போட்ருக்கேன்.. சூளையில் வேலை செஞ்சுருக்கேன் அதெல்லாம்.. நெகிழ வைத்த கிரிக்கெட் வீரர் நடராஜன்

தமிழகத்தை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜன் மயிலாடுதுறையில் நடைபெற்ற தனியார் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அவரது பேச்சு கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு சிறந்த அறிவுரை கூறுவதாக இருந்தது.

தான் அந்த விழாவில் பங்கேற்றது குறித்து பேசுகையில் கிராமத்தில் இருக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தான் இத்தனை தூரம் வந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், “நான் கிரிக்கெட் பயிற்சி செய்யத் துவங்கிய போது என்னிடம் ஷூ கூட இல்லை. எங்கள் ஊரில் உடற்பயிற்சி நிலையம் இல்லை. வெறும் காலில் தினமும் 3 மணி நேரம் ஓடுவேன். வீட்டில் நல்ல சாப்பாடு கிடையாது அப்பா, அம்மா கூலி வேலைக்கு தான் சென்றார்கள். எங்கள் வீட்டில் ஐந்து பேர். மூன்று சகோதரிகள். நான் தான் பெரிய பையன்.” என்றார்.

மேலும், “நம் ஊரில் ஒருவர் ஒரு விளையாட்டை எடுத்து அதில் பெரிய ஆளாக வருவேன் என்று கூறினால் அதை பாராட்ட மாட்டார்கள். மாறாக எதிர்மறையான எண்ணத்தை மட்டுமே விதைப்பார்கள். அன்று நம்மை மோசமாக பேசியவர்கள் நாம் சாதித்த பின், “எனக்கு அப்பவே தெரியும். பையன் பெரிய ஆளா வருவான்னு” என்று சொல்வார்கள். இது தான் உலகம். எனவே, அதைப் பற்றி கவலைப்படாமல், அதை செய்தால் சாதிக்கலாம். நமக்காக அதை செய்தால் சாதிக்கலாம்.” என்றார்.

“கிரிக்கெட் என்று இல்லை அனைவருக்கும் ஏதோ ஒரு விளையாட்டு முக்கியம். ஆனால், விளையாட்டு மட்டுமே முக்கியம் என்றும் சொல்ல மாட்டேன். படிப்பும் முக்கியம். நான் படிக்காமல் நிறைய அனுபவப்பட்டு இருக்கிறேன். மொழிப் பிரச்சனை எனக்கு நிறைய இருந்தது. 20 வயதில் கஷ்டப்படாமல் இருந்து விட்டால் 30, 50 வயதில் கஷ்டப்பட வேண்டும். எனது நண்பர்கள் நிறைய பேர் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.” என்றார்.

“பள்ளியில் படிக்கும் போது நானும் செங்கல் சூளை வேலை, கட்டிட வேலை, சாலை அமைக்கும் வேலை, மணல் அள்ளும் வேலை என பல வேலைகளுக்கு சென்று இருக்கிறேன். இது போன்ற தடைகள் நிறைய இருக்கும். இதை எல்லாம் தடைகளாக நினைக்கக் கூடாது. விளையாட்டு என்றால் ஆரோக்கியமாக உண்ண வேண்டும். அதெல்லாம் வேண்டாம் என்றார்கள். ஆனால், வீட்டில் அம்மா செய்வதே போதும் என்று நான் கூறி விட்டேன்” என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *