இனி டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்னு மீட்டிங்கு லேட்டா போக முடியாது! கார்ல இருந்தே மீட்டிங்குல சேரலாம்! எப்படி?
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒருவர் தனது காரையே அலுவலகமாக மாற்றும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இது வரும் பிப்ரவரி மாதம் முதல் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் என்ற ஆப்பை ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் கார்களில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனில் கனெக்ட் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்ட போது உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற விஷயம் பிரபலமானது. இதன் மூலம் யாரும் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்கள் லேப்டாப்பை இன்டர்நெட் உடன் இணைத்துக் கொண்டு வீடியோ கால் மூலம் கனெக்ட் செய்து வேலை செய்ய துவங்கினார்கள்.
இப்படியாக வீடியோ கால் மூலம் வேலை செய்வதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டீம்ஸ் என்ற அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமாக தான் பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் வீடியோ கால் மீட்டிங்கை நடத்தி வருகின்றன. இதன் மூலம் தான் பல நிறுவனங்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் இந்த அப்ளிகேஷனை இனி ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் கார்களுக்கு உள்ளேயே பயன்படுத்தக்கூடிய வழிமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஒருவர் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீட்டிங்கிற்கு நேரமாகி விட்டால் அவர் உடனடியாக தன் காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழியாகவே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அவரது அலுவலக மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியும். இதனால் அவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தனது செல்போனை எடுத்து அதன் மூலம் கணக்கு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த அப்டேட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் தான் அறிமுகப்படுத்தப் போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அப்டேட் வெளியான பின்பு ஆண்ட்ராய்டு ஆட்டோவை அவரவர் கார்களில் அப்டேட் செய்த பின்பு இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆப்பிள் கார் பிளேவில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது தான் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் இந்த அம்சம் அறிமுகமாகிறது.
இந்த அம்சம் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வரை மீட்டங்கில் இணைவது புதிதாக மீட்டிங்கை உருவாக்குவது காலண்டர் மூலம் அடுத்தடுத்த மீட்டிங்கில் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிரைவ் செய்து கொண்டிருக்கும்போதே இதை ஆப்பரேட் செய்யும் வகையில் குறைவான டிஸ்ட்ராக்ஷன் இருக்கும் படியாக இது வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனம் ஓட்டிக்கொண்டே இப்படியாக மீட்டிங்கில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். அதனால் இது போன்ற செயல்களில் நீங்கள் செயல் ஈடுபடாதீர்கள். ஆனால் இந்த அம்சத்தை நீங்கள் வாகனத்தை ஓரமாக பாஸ் செய்து விட்டு உடனடியாக மீட்டிங்கில் கலந்து கொண்டு உங்கள் அலுவலக பணிகளை செய்யலாம் என இதன் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ என்பது நீங்கள் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் செல்போனில் சில அம்சங்களை காரின் திரையில் அது காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகவும் இதை கூகுள் நிறுவனம் தான் உருவாக்கியது. இதன் மூலம் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எளிமையாக உங்கள் செல்போன் மூலம் செய்ய வேண்டிய பணிகளை செய்யலாம்.
நீண்ட நாட்களாக இந்த மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு ஆட்டோவில் மூலம் பயன்படுத்தக்கூடிய ஆப்ஷன் வேண்டும் என மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது இந்த அப்டேட்டை வழங்கி உள்ளது. இதன் மூலம் அலுவலகத்திற்கு பணியாற்றுபவர்கள் அதிக அளவில் பயன்பட முடியும். இனி அலுவலக மீட்டிங்கை டிராபிக்கில் நிற்பதால் மிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.