டாய்லெட் கூட செல்ல முடியாது.. அழுதுகொண்டே தாய் கேட்ட கேள்வி.. ரிஷப் பண்ட் கம்பேக் பற்றி மருத்துவர்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கம்பேக் குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் பேசியிருக்கிறார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். அந்த விபத்திலேயே கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பண்ட், மீண்டும் பழைய நிலைக்கு வருவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் 12 மாதங்களில் மீண்டும் எழுந்து நடந்ததோடு, 15 மாதங்களில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஃபிட்னஸையும் எட்டி அசத்தியுள்ளார். டெல்லி அணிக்காக களமிறங்கவுள்ள ரிஷப் பண்ட், என்சிஏவிடம் இருந்து உடல்தகுதிக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார். இதன்பின் டெல்லி அணியின் பயிற்சி முகாமில் ரிஷப் பண்ட் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது பிசிசிஐ தரப்பில் ரிஷப் பண்ட் கம்பேக்கை தொடர்ந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரிஷப் பண்ட்-க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தின்ஷா பர்திவாலா பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த போது, மீண்டும் அவரால் பழைய மாதிரி நடக்க முடியுமா என்பதில் தான் ரிஷப் பண்ட் தாய் எங்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். எங்கள் தரப்பில், நிச்சயம் ரிஷப் பண்ட் நடப்பார் என்று உத்தரவாதம் அளித்தோம்.
ரிஷப் பண்டை மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு கொண்டு வருவதே எங்களின் இலக்காக இருந்தது. ஆனால் அது மிக நீண்ட பயணமாக இருக்கும் என்று தெரியும். நடப்பதற்கு 18 மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கூறிய போது, அவர் 12 மாதங்களில் நிச்சயம் நடப்பேன் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் இந்த சிகிச்சை காலத்தில் ரிஷப் பண்டின் மனநிலை நன்றாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் விபத்திற்கு பின் ரிஷப் பண்டால் எந்த வேலையையும் தனியாக செய்ய முடியாது. டாய்லெட் கூட அவரால் செல்ல முடியாத நிலையில் இருந்தார். அது சாதாரணமாக இருக்காது. ஏனென்றால் எப்போதும் பெட்டில் படுத்தே இருக்க வேண்டும். சில நேரங்களில் விரக்தியாவோம். சாதாரண விஷயங்களுக்கு கூட மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய சூழல் இருந்தது. அதுதான் ரிஷப் பண்டின் கடினமாக காலக்கட்டம் என்று தெரிவித்துள்ளார்.