எதை சூஸ் பண்றதுனே தெரியலயே… யமஹா ஆர்15 பைக்கின் 2024 வெர்சன்!! விலையில் பெருசா உயர்வு இல்ல!

யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4) மோட்டார்சைக்கிளுக்கு 2024ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இனி ஆர்15 பைக்கை எந்தெந்த புதிய நிறங்களில் வாங்கலாம் என்பதையும், இந்த பிரபலமான யமஹா பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எப்போதும் மவுசு இருக்கக்கூடிய மோட்டார்சைக்கிள்கள் என்று எடுத்துப் பார்த்தால், நிச்சயமாக அதில் யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிளும் ஒன்றாக இருக்கும். அந்த அளவிற்கு இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆர்15 ஆகும். இந்திய சந்தையில் தற்சமயம் 4ஆம் தலைமுறை ஆர்15 பைக் ‘ஆர்15 வி4’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமானதாக இருப்பதினாலேயே ஆர்15 பைக்கை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் யமஹா மறக்காமல் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில் புதிய 2024ஆம் ஆண்டிற்காகவும் ஆர்15 வி4 மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த யமஹா பைக்கிற்கு 3 புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

விவிட் மஜெண்டா மெட்டாலிக் (Vivid Magenta Metallic), ரேசிங் நீலம் (Racing Blue) மற்றும் மெட்டாலிக் சிவப்பு (Metallic Red) என்பன அந்த 3 புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும். இதில் விவிட் மஜெண்டா மெட்டாலிக் பெயிண்ட் ஆப்ஷன் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஏனெனில், இந்த பெயிண்ட் ஆப்ஷனில் பைக்கின் பெரும்பான்மையான பகுதி அடர் கிரே நிறத்தில்தான் கிடைக்கும் என்றாலும், கவர்ச்சிக்கரமான பிங்க் நிறத்தில் ‘R15’ ஸ்டிக்கரை பெறலாம்.

மேலும், இந்த பிங்க் நிறம் பைக்கின் சக்கர ரிம்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பைக்கில் இருந்து இந்த பிங்க் நிறம் தனியாக தெரிகிறது. இந்த விவிட் மஜெண்டா மெட்டாலிக் பெயிண்ட் ஆப்ஷனில் ‘R15’ ஸ்டிக்கரில் நீல நிறத்தையும் காண முடிகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, மற்ற பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைப்பதை காட்டிலும் இந்த மஜெண்டா பெயிண்ட் ஆப்ஷனில் ‘R15’ ஸ்டிக்கர் சற்று பெரியதாக, தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியக்கூடியதாக உள்ளது.

மற்ற புதிய பெயிண்ட் ஆப்ஷன்களான, ரேசிங் நீலம் மற்றும் மெட்டாலிக் சிவப்பில் பெரியதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. ரேசிங் நீலம் பெயிண்ட் ஆப்ஷனில் பைக்கின் சக்கர ரிம்கள் தனியாக தெரியும் விதத்தில் ரேசிங் நீல நிறத்தில் கிடைக்கும். அதுவே, மெட்டாலிக் சிவப்பு பெயிண்ட் ஆப்ஷனில் கருப்பு நிற சக்கர ரிம்களே கிடைக்கும்.

இருப்பினும், இந்த இரு புதிய பெயிண்ட் ஆப்ஷன்களிலும் பைக்கின் ஸ்டிக்கர்கள் மற்றும் டிகால்களில் சில மாற்றங்களை யமஹா கொண்டுவந்துள்ளது. இவை தவிர்த்து, இந்த 3 புதிய பெயிண்ட் ஆப்ஷன்களில் ஆர்15 பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய பெயிண்ட் ஆப்ஷன்களில் யமஹா ஆர்15 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய 3 பெயிண்ட் ஆப்ஷன்களின் அறிமுகத்தால், ஆர்15 வி4 பைக்கின் பெயிண்ட் ஆப்ஷன்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இந்த யமஹா ஸ்போர்ட்ஸ் ரக பைக்கில் 155சிசி, லிக்யுடு-கூல்டு, 4-வால்வு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18.1 பிஎச்பி மற்றும் 14.2 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *