I.N.D.I.A: பிரதமர் வேட்பாளர் `கார்கே’ ; ராகுலுக்கு செக்… மம்தாவின் உரத்த குரலுக்கு பின்னால்..!
ஒருபக்கம் நாடாளுமன்றத்திலிருந்து எம்.பி.க்கள் இடைநீக்கம், மறுபக்கம் INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் என அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான களம் சூடாகிவிட்டது.
INDIA கூட்டணியை பொறுத்தவரையில் சீட் பகிர்வு மற்றும் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது என்பது சிக்கலாவே இருக்கிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படாத சூழலில், இரு தினங்களுக்கு முன்னர் கூட்டம் நடைபெற்றது. அதில் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா, அகிலேஷ் யாதவ், டி ராஜா, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ் என எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, `எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்துவது, தொகுதி ஒருங்கிணைப்பு’ குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மும்பை INDIA கூட்டணி கூட்டம்
அப்போது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன் கார்கே பெயரை பரிந்துரை செய்தார். முன்னதாக அவர், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் INDIA கூட்டணி கட்சிகள் தங்கள் தலைவரை முடிவு செய்ய வேண்டும்’ என சொல்லியிருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில், ‘கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளர் இருக்க வேண்டும். தலித் தலைவரை கூட்டணியின் முகமாக முன்னிறுத்தினால் தனக்கு எந்த பிரச்னையும் இருக்காது’ என கார்கேவின் பெயரை மும்பொழிந்திருக்கிறார். அதற்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
காங்கிரஸ்
ஆனால் மற்ற தலைவர்கள் அமைதியாகவே இருந்திருக்கிறார்கள். அப்போது குறுக்கிட்ட கார்கே, ‘தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்ற விஷயங்களை பிறகு பேசலாம்’ என்றார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களும் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்கே, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம். முதலில் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகவேண்டும். அதன் பிறகுதான் பிரதமர் பதவியைப் பற்றிப் பேசமுடியும். விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார். மம்தாவின் நிலைப்பாடு மாறியிருப்பது INDIA கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மம்தா பானர்ஜி
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சி கூட்டணி வட்டாரங்கள், “பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரின் வாய்ப்புகளை பறிக்கவே மம்தா முயற்சி செய்து வருகிறார். இது நிதிஷ் குமார் தரப்புக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. மேலும் ராகுல் காந்தியின் மீது மம்தாவுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. எனவேதான் கார்கேவின் பெயரை முன்னிறுத்தி, பிரதமர் நாற்காலியில் கழட்டி விடும் வேலையை பார்த்திருக்கிறார், மம்தா. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சியே. எனவே பா.ஜ.கவை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு முதலில் சீட் பகிர்வு குறித்துதான் முடிவு செய்ய வேண்டும்” என்றனர்.
நிதீஷ் குமார்
“கடந்த சில மாதங்களாகவே INDIA கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. இதற்கு அவர் ஒரு தலித் தலைவர் என்பதே முக்கிய காரணம். இதன் மூலம் பாஜகவின் தாக்குதல் சற்று குறைவாக இருக்கும். ஒருவேளை ராகுல் காந்தியை நிறுத்தினால் பாஜக தலைமையிலான கூட்டணி கடுமையாக விமர்சனம் செய்யும். எனவே அவரது பெயரை மம்தா பானர்ஜி முன்வைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இந்த பிரச்னையை விட்டுவிட்டு கூட்டணி பங்கீட்டை சுமுகமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என கருத்து தெரிவித்திருக்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “இந்தியாவில் மோடிக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பவர் ராகுல் காந்திதான். நடந்து முடித்த தேர்தல்களில் தெலங்கானா வெற்றிக்கும், பிற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கும் முக்கிய காரணம் ராகுல் காந்திதான். மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான். இந்த சூழலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தினால் அவரது செல்வாக்கும், காங்கிரஸின் செல்வாக்கும் மேலும் உயரும்.
ப்ரியன்
அதை மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் விரும்பவில்லை. ராகுல் காந்தியை இப்படியே வளரவிட்டால், பின்னால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகிறார்கள். ஆனால் மீண்டும் பிரதமராக மோடி வந்துவிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு வரும் என்பதை அவர்கள் உணரவில்லை. எனவே ஈகோவை விட்டுவிட்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்றார்.