ஏதோ தொழில்நுட்ப கோளாறுனு நினச்சேன், ஆனா.. இதய பாதிப்பை துல்லியமாக கணித்த ஆப்பிள் வாட்ச்

தகவல் தொடர்பு வசதிகள் மட்டுமன்றி, நம் உடல் ஆரோக்கியம் குறித்த அடிப்படை விஷயங்களை கணிப்பதாக ஸ்மார்ட் வாட்ச்கள் அமைகின்றன. அதிலும் உடல் ஆரோக்கியத்தை கணிப்பதில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அமைகின்றன. குறிப்பாக ஆப்பிள் வாட்ச் கட்டியிருப்பவர்களின் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தால், உடனடியாக அவரின் இருப்பிட விவரத்துடன் அவசர உதவி மையத்திற்கு தானியங்கி தகவல் அனுப்பப்படுகின்றது. மேலும், சீரற்ற இதயத் துடிப்பு குறித்து நமக்கு தெரிய வரும்போது நாம் மருத்துவ சிகிச்சையை நாடி நம்மை காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெஃப் ப்ரீஸ்ட் என்ற 66 வயது நபருக்கு அண்மையில் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது. எப்போதும் போல இயல்பாக அமர்ந்திருந்த இவர், உடலில் திடீரென்று இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது குறித்து ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்தது. ஆனால், இதற்கு முன்பு இதயம் தொடர்புடைய பிரச்சினைகள் எதுவும் இல்லாத நிலையில் அது ஏதோ வாட்ச்சில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு என்று அவர் கருதிக் கொண்டார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “என்னுடைய வாட்ச்சில் தான் ஏதோ பிரச்சினை என்று நான் கருதிக் கொண்டேன். எனக்கு உடலில் எதுவும் மாற்றம் தெரியவில்லை. நான் இயல்பாகவே உணர்ந்தேன்’’ என்றார்.

இருப்பினும், ஜெஃப் ப்ரீஸ்டின் மனைவி எச்சரிக்கை செய்ததின் பேரில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இதயம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதே சமயம், அவருக்கு இதுகுறித்து எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் அடிப்படையான மருந்துகளை கொடுத்து மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்குப் பிறகும் கூட அடிக்கடி இதயத்துடிப்பு மாறுவது குறித்து ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தது. இதையடுத்து மீண்டும் அவருக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன.

தொழில்நுட்பம் : ஆப்பிள் வாட்ச் ஓஎஸ்9 என்ற மாடல் கடந்த 2022ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியை இது பெற்றது. இந்த வாட்ச் ஆக்ஸிஜன் சப்ளை, உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டறிய உதவுகிறது.

அமெரிக்காவில் அண்மையில் 5 நபர்கள் பயணம் செய்து கொண்டிருந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியது. அதில் ஒருநபர் ஆப்பிள் வாட்ச் கட்டியிருந்த நிலையில் விபத்து குறித்து அவசர உதவி மையத்திற்கு தகவல் சென்றது. அதன் பேரில் மீட்பு படையினர் விரைந்து வந்து அனைவரையும் மீட்டனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *