அம்மா கையில் சாப்பிடணும்.. ஏங்கிய இஷான் கிஷன்.. களத்தில் இறங்கிய குடும்பம்.. நெகிழ வைக்கும் சம்பவம்
இந்திய அணி விக்கெட் கீப்பராக நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் மனச் சோர்வின் காரணமாக இந்திய அணியை விட்டு விலகி தனிப்பட்ட முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவரது மனச் சோர்விற்கு காரணமே அவர் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஆடி வந்தது தான். இடையே மிகச் சில நாட்களே அவர் தன் வீட்டிற்கு செல்ல முடிந்தது. 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்ததால் களத்தில் ஆடவில்லை என்றாலும் அணியில் ஒரு வீரராக அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து இருக்கிறார் இஷான் கிஷன்.
அதனால் தனக்கு ஓய்வு அளிக்குமாறு அவர் கேட்டும் பிசிசிஐ அவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்தது. அதனால், மேலும் சோர்வடைந்த இஷான் கிஷன் தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும். அம்மா சமைக்கும் உணவை உண்ண வேண்டும் என ஏங்கி இருக்கிறார். குறிப்பாக தன் தாயின் அன்பை அவர் எதிர்பார்த்து இருக்கிறார்.
ஆனால், அவர் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் அவரால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. குஜராத் மாநிலத்தின் பரோடா நகரில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் தான் இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவருக்காக மொத்தமாக அந்த ஊருக்கே குடி பெயர்ந்து இருகின்றனர்.
தற்காலிகமாக 2 அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் இஷான் கிஷனின் பெற்றோர் மற்றும் மொத்த குடும்பமும் குடி பெயர்ந்து இருக்கின்றனர். அவரது அண்ணன் மருத்துவர் என்பதால் அவர் மட்டும் லக்னோவில் இருக்கிறார். இப்போது அவர் மூன்று வேளையும் தன் தாயின் கைப்பக்குவத்தில் தயாராகும் உணவை உண்டு வருகிறார். பயிற்சி நேரம் போக, மற்ற நேரத்தில் தன் அண்ணன் மகனுடன் நேரம் செலவிட்டு தன் மனச் சோர்வை போக்கி வருகிறார்.
2024 ஐபிஎல் தொடர் வரை மட்டுமே இஷான் கிஷன் பரோடாவில் பயிற்சி மேற்கொள்வார். ஆக, வெறும் இரண்டு மாதத்திற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருக்கின்றனர். இஷான் கிஷனின் மனச் சோர்வை போக்க மொத்த குடும்பமும் களமிறங்கி இருப்பது நெகிழ்ச்சியான சம்பவமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.