நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. நொந்து போயிட்டேன்.. ஆர்சிபி அணி மீது கொந்தளித்த சாஹல்.. உண்மை இதுதான்
இந்திய சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2014 முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடினார். அந்த அணியில் திறமையாக செயல்பட்ட அவர், அதன் காரணமாகவே இந்திய அணியிலும் இடம் பெற்றார். அதனால், சாஹலுக்கு ஆர்சிபி அணி எப்போதுமே தனிப்பட்ட விருப்பமான அணி.
இந்த நிலையில், 2022 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் அவரை தக்க வைக்காமல் நீக்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலையில் விராட் கோலி மற்றும் வேறு இரண்டு முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைத்தது. உங்களை ஏலத்தில் வாங்குவோம் என சாஹலிடம் வாக்குறுதி அளித்து இருந்தது பெங்களூர் அணி நிர்வாகம். அதுவும் சாதாரண வாக்குறுதி அல்ல. இவ்வளவு கூடுதல் பணம் கொடுத்து உங்களை வாங்குகிறோம் என கூறி இருந்தது.
ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் சாஹல் ஏலத்தில் வந்த போது பெங்களூர் அணி அவரை வாங்க விருப்பம் காட்டவில்லை. அதைப் பார்த்து அதிர்ச்சியானார் சாஹல். அந்த ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 6.50 கோடி கொடுத்து வாங்கியது. ஆனாலும், பெங்களூர் அணி தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் நொந்து போய் இருந்தார். அது குறித்து சில மாதங்கள் முன்பு ஒரு பேட்டியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதற்கு அப்போதைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் விளக்கம் அளித்து இருக்கிறார். 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட சாஹலை வாங்க இருந்ததாகவும், ஆனால், ஏலத்தின் ஆறாவது சுற்றில் தான் அவரது பெயர் இடம் பெற்றது எனவும் கூறினார்.
அதனால், அவர் பெயர் வரும் வரை காத்திருந்தால் தங்களால் அதற்கு முன் அறிவிக்கப்பட்ட பல வீரர்களை வாங்க முடியாமல் போயிருக்கும். எனவே, ஏலத்தின் சூழ்நிலை கருதி அன்று சாஹலை நாங்கள் வாங்கவில்லை என விளக்கம் கூறி இருக்கிறார்.
ஆறாவது சுற்று வரும் வரை நாங்கள் காத்திருந்தாலும், அப்போது ஐந்து அணிகளிடம் அதிக பணம் இருந்தது. அவர்களுடன் போட்டி போட்டு சாஹலை வாங்கும் அளவுக்கு எங்களிடம் அப்போது பணம் இல்லை. ஏலம் முடிந்த உடன் நான் சாஹலிடம் இது குறித்து தொலைபேசியில் விளக்கம் அளிக்க முயன்றேன். ஆனால், அவ அவர் ஏலம் குறித்த செயல்பாட்டை புரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தன்னை ஏலத்தில் வாங்கவில்லை என்பதில் மட்டுமே அவர் எண்ணம் இருந்தது என மைக் ஹெஸ்ஸன் கூறி இருக்கிறார்.