7 மாசமா வேலையில்லாமல் இருந்தேன்… ஒருவழியா வாய்ப்பு கிடைச்சிருச்சு – மீண்டு(ம்) நடிக்க வந்த சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், திருமணத்துக்கு பின்னரும் மவுசு குறையாமல் நடித்து வந்தார். இந்த நிலையில், நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் பான் இந்தியா நாயகியாக உருவெடுத்த சமந்தா, இந்தியிலும் நடிக்க தொடங்கினார். இந்தியில் முதன்முறையாக நடிகை சமந்தா நடித்த பேமிலி மேன் 2 வெப் தொடர் அமோக வரவேற்பை பெற்றது.
இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், திடீரென மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டார் சமந்தா. இதற்காக சிகிச்சை எடுத்தாலும் அது முழுமையாக குணமடையவில்லை என்பதால் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சமந்தா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதனை அறிவித்தார். இதையடுத்து அமெரிக்கா சென்ற அவர் அங்கு மயோசிடிஸுக்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்த நிலையில், சுமார் 7 மாத ஓய்வுக்கு பின்னர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சமந்தா. இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது : “ஆம் நான் மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டேன். நிறைய பேர் எப்போ படம் நடிக்க போகிறீர்கள் என்று கேட்டீர்கள் இறுதியாக அதற்கு விடை கிடைத்துவிட்டது. இவ்ளோ நாள் நான் வேலையில்லாமல் தன் இருந்தேன்.
ஆனால் அதேநேரத்தில் நான் என் தோழியுடன் சேர்ந்து ஒரு போட்காஸ்ட் ஒன்றையும் செய்திருக்கிறேன். இது எதிர்பாராத ஒன்று தான், ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அது உடல்நலம் சம்பந்தப்பட்ட போட்காஸ்ட். அடுத்த வாரம் அதை வெளியிட உள்ளேன். அது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் என்ஜாய் பண்ணி இதை நான் செய்துள்ளேன்” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் சமந்தா. மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீண்டு, தற்போது சமந்தா மீண்டும் நடிக்க வந்துள்ள செய்தியை கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.