ஹர்சல் படேலுக்காக காத்திருந்தேன்.. ஸ்கூப் ஷாட் அடித்தது எப்படி தெரியுமா? தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்
பஞ்சாப் அணியின் ஹர்சல் படேல் ஸ்லோயர் பால் வீசுவதற்காக காத்திருந்து ஸ்கூப் ஷாட்டை விளாசியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. கடைசி நேரத்தில் விராட் கோலி, அனுஜ் ராவத் உள்ளிட்டோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கைகள் ஓங்கியது. அப்போது களம் புகுந்த தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியை வெற்றிபெற வைத்தார்.
இதன் மூலமாக ஆர்சிபி அணி சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறிய போது, தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 38 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் தனது பேட்டிங் ஃபார்மை நிரூபித்து ரசிகர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு பின் தினேஷ் கார்த்திக் பேசுகையில், எனது பேட்டிங்கின் போது முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் எனது மனதில் கொஞ்சம் நன்றாக உணர தொடங்கினேன். எனக்கும் லோம்ரோருக்கும் இடையில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் அவர் களமிறங்கி சில பந்துகளை எதிர்கொண்ட உடன் அபாரமாக ஒரு சிக்சரை விளாசி அசத்தினார்.
அவரின் ஆட்டம் எனக்குள் இருந்த அழுத்தத்தை நீக்கிவிட்டது. ஹர்சல் படேல் போன்ற பவுலரின் ஸ்லோயர் பந்துகளை மிஸ் செய்ய கூடாது. அவரின் பந்துகளை மிஸ் செய்தால், ஆட்டம் நிச்சயம் மோசமாகிவிடும். அதனால் ஸ்கூப் ஷாட்டை சரியாக அடிக்க வேண்டும் என்று நினைத்து காத்திருந்தேன். அதேபோல் லோம்ரோர் கொஞ்சம் கூட பதற்றம் கொள்ளவில்லை.
அவர் சிக்ஸ் அடித்த பின் அப்படியே நிதானமாக இருக்குமாறு அறிவுறுத்தினேன். அதேபோல் கரண் ஷர்மாவுக்கு பதிலாக நான் களமிறங்கியதை போல், நான் பவுலிங் செய்தால் ஆர்சிபி நிலைமை எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் என்று சிரித்து கொண்டே தெரிவித்தார். மேலும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து 17 முதல் 20 ஓவர்கள் வரை அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 372 ரன்களுடன் தினேஷ் கார்த்திக் 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.