பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 நாளில் முடிவை அறிவிப்பேன் : ம.நீ.ம. தலைவர் கமலஹாசன்..!

பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கட்சிகளிடையே தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன.

ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு யாரும் அழைக்கவில்லை. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில், இடம் பெற்றுள்ளதா? அந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்தன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்திருந்தனர். கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ப்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். அமெரிக்காவில் 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு கமலஹாசன் நேற்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கமலஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

நான் தக் லைப் முன்னேற்பாடுகளுக்காக, அமெரிக்கா சென்றிருந்தேன். அமெரிக்காவில் பணிகளை முடித்து விட்டு இப்போது தான் சென்னை திரும்பி இருக்கிறேன். இன்னும் இரண்டு தினங்களில், நல்ல செய்திகளுடன் நான் உங்களை சந்திக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்தி.

ஏனென்றால் நான் அமெரிக்காவில் இருந்து செய்திகளை கொண்டு வரவில்லை. இங்கிருந்து தான் உருவாக்க வேண்டும். நான் இங்கு கூட்டணி கட்சிகளுடன் பேசி விட்டு, அடுத்த இரண்டு நாட்களில், உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அப்போது எல்லா தகவல்களையும் கூறுகிறேன்.

இரண்டு நாட்களில் அந்த வாய்ப்பு மீண்டும் அமையும். எங்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில், நடந்து கொண்டு இருக்கின்றன. கூட்டணி கட்சிகள் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை குறித்து, அடுத்த இரண்டு நாட்களில் நான் நிச்சயமாக கூறுவேன்.

காங்கிரஸ் கட்சியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை குறித்தும், இரண்டு நாட்களில் கூறுவேன். இப்போது எதுவும் நான் கூறக்கூடாது. இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நாளை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *