வர மாட்டேன்.. அடம்பிடித்த ரோஹித் சர்மா.. கழட்டி விட தயாராகும் மும்பை இந்தியன்ஸ்.. என்ன நடந்தது?
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா இடம் பெறாமல் போனாலும் ஆச்சரியம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
தன்னை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியதை அடுத்து ஒரு சாதாரண பேட்ஸ்மேனாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்க இருக்கிறார் ரோஹித் சர்மா. எனினும், அவர் அணியுடன் ஒன்றவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் அவர் நெருங்கவில்லை. இருவரும் பயிற்சியில் ஒரு முறை சந்தித்து கொண்டனர். அப்போது லேசாக கட்டி அணைத்து ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டதோடு அதுவும் முடிந்து விட்டது.
முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஆலோசனை கூறி அணியை வழி நடத்த உதவுவார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்ட கதைகள் எதுவும் அங்கே நடக்கவில்லை. அது மட்டுமின்றி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
ஒவ்வொரு வீரரும் சக வீரருடன் பழக இது ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நோக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஏற்பாட்டை செய்தது. இந்த நிகழ்விலும் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. தனது பேட்டிங்கை மேம்படுத்த உள்ளதாகக் கூறி அவர் மும்பையிலேயே தங்கி விட்டார்.
குஜராத் அணியுடனான முதல் போட்டி இன்று துவங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு பயிற்சிப் போட்டியை நடத்தினர். இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஒரு அணியின் கேப்டனாக இருப்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் இந்த பயிற்சிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது தெளிவாக தெரிகிறது. எனவே, அவரை போட்டிகளில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை முதல் சில போட்டிகளில் ரோஹித் சர்மாவை ஆட வைத்து விட்டு, பின்னர் அவரை நீக்கலாம் அல்லது தைரியமாக முதல் போட்டியில் இருந்தே அவரை நீக்கலாம்.
ஆனால், இதில் எது நடந்தாலும் ரசிகர்களின் கடும் கோபத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஆளாகும். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியான துவக்க வீரர் என யாரும் இல்லை. எனவே, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மாவே துவக்க வீரராக களமிறங்குவார். அதன் பின் அணியில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து, ரோஹித் – ஹர்திக் இடையிலான உறவு மேம்படுவதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.