இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன். காளிதாஸ் ஜெயராம் பேட்டி

சினிமா: 2016-ம் ஆண்டு ‘மீன் குழம்பும், மண் பானையும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், பல வருடங்களாகியும் பெரிதாக சோபிக்கவில்லை.
இன்னும் உரிய இடம் கிடைக்காமல் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ‘விக்ரம்’ படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்தது விமர்சிக்கப்பட்டது. வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இனி கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று காளிதாஸ் கூறியிருக்கிறார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காளிதாஸ், “பெரிய கதாபாத்திரமோ, சிறிய கதாபாத்திரமோ என்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்கள் கொடுத்த திறமையான இயக்குநர்களுடன் இதுவரை பணிபுரிந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் நான் நடித்திருப்பேன். ஆனால், அவை விலைமதிப்பற்ற அனுபவங்களை எனக்குப் பரிசளித்தன. எந்தவொரு நடிகரையும் போலவே, நானும் என்னுடைய அடுத்தக்கட்டம் நோக்கி நகர உள்ளேன். என்னுடைய நடிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான முழுநீள கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன்.
இனிமேல், தீவிர முயற்சிகள் தேவைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும்படியான படங்களில் நடிக்க உள்ளேன். இந்த புதிய முடிவின் முதல் படியாக, பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்தத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இதை நான் உற்சாகமாக எதிர்பார்த்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.