இட்லி, தோசை எல்லாம் இரவில் சாப்பிடக்கூடாதா? நோட் பண்ணுங்கப்பா..!
தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் இரவு நேர உணவாக இட்லி, தோசை தான் இருக்கிறது. சமைப்பது ஈஸி என்பதாலும், உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்பதாலும் இட்லி, தோசையை இரவு உணவாக எடுத்துக் கொள்வதில் விரும்புகின்றனர். மருத்துவர்கள் கூட உடல்நிலை சரியில்லை என்றால் முதலில் பரிந்துரைப்பது இட்லி தான். ஏனென்றால் இதில் உடலுக்கான மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அரிசி மாவை அரைத்து புளிக்க வைத்து, அதாவது இதனை நொதித்தல் என்றும் கூறலாம், அதன்பிறகு ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் உணவு இட்லி. இதனை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் எல்லாம் வராது.
எளிதில் செரிமானமாகி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உடலுக்கான நல்ல பாக்டீரியாவையும் கொடுக்கிறது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் இதனை முதன்மையான உணவாக எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் இதுபோன்ற மென்மையான உணவுகளை சாப்பிடும்போது குடலியக்கமும் சீராக இருக்கும். இட்லியில் உடல் ஆரோக்கியதுக்கு ஏற்ப பல்வேறு வகைகளிலும் சமைத்து சாப்பிடலாம். அதாவது வெறுமனே அரிசி இட்லி தோசை என்பதோடு இல்லாமல் ராகி இட்லி, சோள இட்லி, கம்பு இட்லி கூட செய்து சாப்பிடலாம்.
ஆனால், இட்லி சாப்பிடுவதிலும் சிலருக்கு கட்டுப்பாடுகள் உண்டு. எப்படி இரவு நேரங்களில் அதிகளவு மாமிசம் சாப்பிடக்கூடாது, தயிர் சாப்பிடக்கூடாது, கீரைகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என சொல்கிறார்களோ அதே காரணம் தான் இட்லிக்கும் பொருந்தும். ஏனென்றால் மாமிசம் கடினமான உணவு என்பதால் இரவில் சாப்பிட்டால் செரிமான கோளாறு நிச்சயம் ஏற்படும். இதனால் மலக்கட்டு, வாயு, அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் எல்லாம் நாட்பட வந்து சேரும்.
அதேபோல் தயிரும் கீரையும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இரவில் அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது பொதுவான உணவியல் விதிமுறையாக உள்ளது. இந்த வரிசையில் இட்லி எப்படி சேரும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு எளிமையான பதில் பிரச்சனை இட்லியில் இல்லை. நம் உடலில் தான் இருக்கிறது. அதாவது, இட்லி நொதித்தல் முறையில் புளித்தபிறகு சமைக்கப்படும் உணவு. இது ஏற்கனவே அஜீரண கோளாறு, வாயு பிரச்சனை இருப்பவர்களுக்கு செட் ஆகாது. அந்தப் பிரச்சனை உள்ளவர்கள் இட்லி, தோசையை சாப்பிட்டால், அதுவும் இரவில் சாப்பிட்டால் பிரச்சனை இன்னும் தான் அதிகமாகும்.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இட்லி, தோசை மற்றும் ஆப்பம் எல்லாம் சரியான இரவு நேர உணவாக இருக்காது. உங்கள் உடம்பில் பிரச்சனை இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் மேலே சொன்ன அஜீரணக்கோளாறு, வாயு பிரச்சனை, வயிறு உபாதைகள் எல்லாம் இருந்தால் எடுத்துக் கொள்ளக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனைபேரில் சாப்பிடுவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.